புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (10:56 IST)

கடுமையாகும் ரயில் பயணங்கள்! – ரயில்வே துறை ஆலோசிப்பதாக தகவல்

ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டாலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ரயில் பயணங்களை கட்டுக்கோப்பானதாக மாற்ற ரயில்வே அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 14ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் 14ம் தேதி முதல் ரயில், விமான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. ஆனால் தற்போது கொரோனா தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கொரோனா பரவலை தடுக்க ரயில்வே அமைச்சகம் சில முக்கிய ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ரயில்வே பகுதிகள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளது. பச்சை மண்டலம் அதிக பாதிப்பில்லாத பகுதியாகும், அந்த மண்டலத்தில் அனைத்து ரயில்களும் இயங்கும், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகள் மஞ்சள் மண்டலமாக அறிவிக்கப்பட்டு அங்கு முக்கியமான சில ரயில்கள் மட்டும் இயக்கப்படும். சிவப்பு மண்டலம் என்பது கொரோனா ஆபத்து அதிகம் உள்ள பகுதி எங்கு எந்த ரயில்களும் இயங்காது என கூறப்படுகிறது.

மேலும் ரயில்களில் முன்பதிவுகளுக்கு மட்டுமே அனுமதி எனவும், ஏசி பெட்டிகள் மற்றும் முன்பதிவற்ற பெட்டிகள் வசதியை நீக்கவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரயில்களை பாயிண்ட் டூ பாயின்ட் சர்வீஸாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இடையே ரயில் எங்கும் நிற்காது. ஆறு படுக்கை கொண்ட ஒரு கேபினில் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ரயிலில் யாருக்காவது கொரோனா இருப்பது தெரியவந்தால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.

ப்ளாட்பார்ம் டிக்கெட்டுகள் அனுமதியில்லை. முன்பதிவு செய்தவர்கள் சில மணி நேரங்கள் முனதாகவே வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் போன்ற கண்டிப்பான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது மற்றும் செயல்படுத்துவது குறித்தும் ரயில்வே துறை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.