திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (12:16 IST)

ரயில்களில் தூங்க விடாம தொந்தரவு..! ரயில்வே நிர்வாகம் போட்ட புதிய உத்தரவு!

Train
ரயில்களில் பயணிகள் தூங்க முடியாத அளவு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

நீண்ட தூர பிரயாணத்திற்கு இந்தியாவில் பயணிகளில் பெரும்பாலான விருப்ப தேர்வாக இருப்பது ரயில்கள்தான். சோர்வில்லாமல் படுத்து உறங்கியபடியே செல்லலாம் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். ஆனால் சக ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சிலரால் பலருக்கு ரயில் பயணமே கொடுமையான அனுபவமாக மாறிவிடுகிறது.

இரவில் தூங்க விடாமல் லைட்டை போட்டு வைத்திருப்பது, செல்போனில் சத்தமாக பாட்டு வைப்பது என சக பயணிகள் செய்யும் தொல்லைகள் சொல்லி மாளாதவையாக உள்ளதாக பலரும் புலம்புகின்றனர்.


இந்நிலையில் ரயில் பயணத்தில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரவு 10 மணிக்கு மேல் பயணத்தில் எந்த ரயில் பயணிகளும் செல்போனில் சத்தமாக பாடல்கள் வைக்கவோ, உரத்த குரலில் பேசவோ கூடாது. குறைந்த ஒளி அளிக்கும் இரவு விளக்கு தவிர மற்ற விளக்குகள் அணைத்தும் அணைக்கப்பட வேண்டும்.

ரயில் நிறுத்தங்களில் விளக்கை ஆன் செய்து கொள்ளவும், அணைத்துக் கொள்ளவும் அனுமதி உண்டு. இதனால் சக பயணிகள் தூக்கம் கெடாமல் இருக்கும். இந்த விதிகளை மீறி செயல்படும் பயணிகள் மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.