அதிர்ச்சியளிக்கும் அரசு: கர்நாடகாவில் கன்னடர்களுக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு
கர்நாடகா மாநிலத்தில் பெங்களூர் உட்பட அனைத்து இடங்களிலும் உள்ள தனியார் நிறுவனங்களில், 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு சட்டம் கொண்டுவர உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பெங்களூர், மைசூர், பெல்காம், மங்களூர் உள்ளிட்ட அனைத்து இடங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் பெரும்பாலும் பிற மாநில ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகா மாநில அரசு அம்மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில், 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த முடிவு கர்நாடக மாநிலத்தில் பணிபுரியும் பிற மாநில ஊழியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
கர்நாடக தொழில் வேலை வாய்ப்பு விதிமுறை 1961 என்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் மூலம் 100 சதவீதம் கன்னடர்களுக்கு வேலை கிடைக்கும்.
இந்த சட்டத்திருத்தில் சில விதிமுறைகள் மற்றும் சில தளர்வுகள் உள்ளது. அதன்படி, கர்நாடக அரசிடம் நிலம், நீர், மின்சாரம், வரி சலுகை போன்றவற்றை பெறும் அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
ஐ.டி, பி.டி, அறிவுசார் தொழில் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதி விலக்கு அதிகபட்சம் 5 வருடங்களுக்கு மட்டும் அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.