1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 ஜனவரி 2025 (13:00 IST)

தமிழக முதல்வரை அடுத்து கேரள முதல்வரும் எதிர்ப்பு.. யுஜிசி புதிய விதிகள் அமலுக்கு வருமா?

யுஜிசி யின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கேரள சட்டமன்றத்தில் யுஜிசியின் புதிய விதிக்கு எதிராக தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி புதிய விதிமுறைகளை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் யூஜி சி யின் புதிய வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சருக்கு அவர் கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் யுஜிசியின் புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும் என கேரள சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. உடனடியாக புதிய விதிமுறைகளை திரும்ப பெற்று ஏற்கனவே உள்ள நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கூறும் தீர்மானத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் இன்று முன்மொழிந்தார்.

கேரள மாநிலத்தில் உள்ள கல்வி நிபுணர்கள், மாநில அரசு அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டு தான் இந்த தீர்மானம் முன்மொழியப்படுவதாகவும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநில சட்டப்பேரவைகளால் இயற்றப்பட்ட சட்டங்களின்படி தான் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva