புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 24 டிசம்பர் 2024 (09:57 IST)

ஜனவரி 8ஆம் தேதி கூடுகிறது பாராளுமன்ற கூட்டுக்குழு: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு..!

சமீபத்தில் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்ற போது, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 8ஆம் தேதி பாராளுமன்ற கூட்டுக்குழு கூட இருப்பதாகவும், அப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா, டிசம்பர் 14ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலும் அதே நாளில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாராளுமன்ற கூட்டுக் குழுவிற்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பிரியங்கா காந்தி உள்பட 39 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு, ஜனவரி 8ஆம் தேதி கூடி, இது குறித்து விவாதிக்க ஏற்பாடாகியுள்ளது. சட்டத்துறை செயலாளர்களும் இந்த மசோதா குறித்து விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்பட்டால், நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து விரிவாக விளக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டுக்குழு கூடி விவாதித்த பின், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.


Edited by Siva