முஸ்லீம் என்பதால் வாடகைக்கு வீடு இல்லை: மும்பை இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
மும்பை இளம்பெண் ஒருவருக்கு முஸ்லீம் மதத்தைக் காரணம் காட்டி வீட்டு உரிமையாளர் வாடகைக்கு வீடு தர மறுத்து வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மிஸ்பா காத்ரி என்பவர் மும்பை வாதாலா பகுதியில் உள்ள சங்வி ஹைட்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுக்க நினைத்து புரோக்கரை அணுகினார். அவரும் ஒரு வீட்டைக் காட்டியுள்ளார். வீடு பிடித்ததால் அந்த வீட்டையே வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால் அவரிடம் நீங்கள் முஸ்லீம் என்பதால் வீட்டை காலி செய்யுங்கள் என்று உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இளம்பெண் மிஸ்பா காத்ரி கூறுகையில், " நான் முஸ்லீம் என்பதால் வீடு வாடகைக்குக் கிடைக்காது என்று புரோக்கர் என்னிடம் தெரிவித்தார். மேலும் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, அதற்கு புரோக்கரோ, அபார்ட்மென்ட் நிர்வாகமோ பொறுப்பில்லை என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு புரோக்கர் வலியுறுத்தினார்.
ஆனால் அதில் நான் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததும் என்னை வீட்டைக் காலி செய்யுமாறு தெரிவித்தனர். இது குறித்து நான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளேன்" என்றார்.
இதேபோல் சில நாட்களுக்கு முன்பு தான் ஜெஷான் அலி கான் என்ற எம்.பி.ஏ. பட்டதாரி முஸ்லீம் என்பதால் மும்பையைச் சேர்ந்த வைர ஏற்றுமதி நிறுவனம் அவருக்கு வேலை அளிக்க மறுத்ததாகச் செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.