செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (11:58 IST)

காஷ்மீரில் அராஜகம்; தொடர்ந்து கொல்லப்படும் பாஜக பிரமுகர்கள்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில் மற்றுமொரு பாஜக மாவட்ட தலைவர் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாகாணத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அங்குள்ள பாஜக பிரமுகர்கள் மீது பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாஜக தலைவர் வாசிம் பாரி மற்றும் அவரது தந்தை, சகோதரர்கள் ஆகிய மூவரை கடைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கும்பல் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 6ம் தேதி குல்காம் பகுதியில் பாஜக பஞ்சாயத்து தலைவர் அகமது காண்டே அவரது வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் காஷ்மீர் பாஜக உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பலர் கூறி வந்த நிலையில் மற்றுமொரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

காஷ்மீரின் புத்காம் மாவட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான முன்னணி தலைவராக இருந்தவர் அப்துல் ஹமீது நஜார். காலையில் நடைபயிற்சி சென்ற இவரை அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியுள்ளனர். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாளுக்கு நாள் காஷ்மீர் பாஜக பிரமுகர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.