இந்திய ரெயில்வே தீபாவளி சலுகை: ஒரு காசுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு!!
இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமானது, அதன் இணையதளத்தில் இ-டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டும் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகையாக ஒரு காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு செய்யும் திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.
அதன்படி, 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை விபத்து காப்பீட்டை ரயில் பயணிகள் பெறலாம். கடந்த மாதம் தொடங்கிய இத்திட்டத்தின் கீழ் காப்பீடு வசதியைப் பெற இதுவரை ஒரு கோடியே 20 லட்சத்து 87 ஆயிரம் பயணிகள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகையாக 92 காசு என்ற கட்டணத்தை ஒரு காசு என ஐ.ஆர்.சி.டி.சி குறைத்துள்ளது.
இன்று முதல் தொடங்கி வருகிற 31-ம் தேதி வரை இ-டிக்கெட் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகள் ஒரு காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு செய்து கொள்ள முடியும்.