வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (12:50 IST)

அதிக வேலைவாய்ப்புள்ள கடல்சார் துறை; இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் தகவல்

உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போதிலும், கடல்சார் துறையில், கடந்த 5 ஆண்டுகளில் இந்திய கடல்சார் பல்கலைக்கழக மாணவர்கள் 70 சதவீதம் பேர் சிறப்பான வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருமதி. மாலினி வி. சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருமதி மாலினி வி. சங்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து உலகப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்த போதிலும், கடந்த ஐந்து வருடத்தில் இந்திய கடல்சார் பல்கலைக்கழக மாணவர்கள் 70% பேர் சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் என்றார்.

மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 க்கு ஏற்ப பாடத்திட்டங்களை மறுசீரமைத்து,  ஆராய்ச்சி, தரமான கல்வி, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றின் மூலம், கப்பல் துறையில் திறம்பட செயலாற்ற கூடிய வகையில் மாணவர்களை உருவாக்கி வருகிறோம், என்று அவர் தெரிவித்தார்.

ரஷ்யா, மொரீஷியஸ், பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கடல்சார் பல்கலைக்கழகங்களுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது என்றார் அவர்.

தேசிய பெருங்கடலியல் நிறுவனம், தூத்துக்குடி வ உ சி துறைமுகம்,  இந்திய உள்நாட்டு நீர் வழி போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட 10 தலைசிறந்த கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது, என்றும் அவர் தெரிவித்தார்.

சாகர்மாலா திட்டத்தின் கீழ் சரக்கு போக்குவரத்து மேலாண்மை, மாலுமிகளுக்கான பயிற்சி, ஆய்வு ஆகியவை குறித்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்துடன் இணைந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தமான் மற்றும் நிக்கோபார் துறைமுக நிறுவனம் சிறப்பு பயிற்சி நிறுவனமாக ஒப்பந்தமாகி உள்ளது.

சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, மும்பை துறைமுகம், நவி மும்பை மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் உள்ள தனது மையங்களில் சிறப்பான பயிற்சியை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது என அவர் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் விநியோக சங்கிலி தடைபட்டு சவாலான சூழல் ஏற்பட்டது. இதுபோன்று எதிர்காலத்தில் பேரிடர் சூழலை சமாளித்து பணியாற்றும் வகையிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கப்பல் போக்குவரத்து, கப்பல் துறை பணியாளர்கள் குறித்து அதிக விழிப்புணர்வு இதுவரை இல்லை என்று குறிப்பிட்ட அவர், சர்வதேச சரக்கு போக்குவரத்தில் 95 சதவீதமும், மதிப்பளவில் 70 சதவீதமும் கப்பல் போக்குவரத்து பெரும் பங்கு வகிக்கிறது  என்றார். இத்தகைய,  சிறப்பான வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் பயில மாணவர்கள் முன்வர வேண்டுமென அப்பல்கலைக்கழக துணைவேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் (பொ) திரு சரவணன், முதல்வர் சிவக்கொழுந்து ஆகியோர் உடனிருந்தனர்.