ஒரு மணி நேரத்தில் 98.4 மி.மீ மழை.. கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை..!
கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது என்பதையும் சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை இந்திய மாநில ஆய்வு மையம் விடுத்துள்ளது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் ஒரு மணி நேரத்தில் 98.4 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் குறிப்பாக கொச்சியில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேரளாவின் முக்கிய பகுதிகளான கொல்லம், கோட்டயம், பத்தினம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மாநில பேரிடர் மீட்பு துறையினர் தீவிரமாக மீட்பு பணிகளை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் ஜூன் 1 முதல் பருவமழை தொடங்கும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்த நிலையில் மே இறுதி வாரத்தில் கனமழை கொட்ட தொடங்கி விட்டது என்பதும் அதனால் பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் இன்னும் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் கேரள மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் வீடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Edited by Siva