வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 18 மே 2016 (17:16 IST)

கணவருடன் தேனிலவு முடித்து காதலனுடன் பறந்து சென்ற மனைவி

கணவருடன் தேனிலவுக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் போது, விமானநிலையத்தில் மாயமான பெண்ணை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.


 

 
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு சமீபத்தில்தான் திருமணம் முடிந்தது. அதன்பின் புதுமண தம்பதிகள், மேற்கு வங்க மாநிலம் டார்ஜலிங் மாவட்டத்தில் உள்ள பாக்டோக்ராவுக்கு தேனிலவுக்கு சென்றனர். அங்கு தேனிலவு கொண்டாடி முடித்து விட்டு, விமானம் மூலம் கடந்த திங்கள் கிழமை மாலை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்தனர்.
 
அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் லக்னோவுக்கு அவர்கள் செல்ல வேண்டியிருந்தது. அப்போது, அந்த பெண் தன்னுடைய கைப்பை மற்றும் செல்போன் ஆகியவற்றை தனது கணவரிடம் கொடுத்துவிட்டு கழிவறை செல்வதாக கூறியிருந்தார்.
 
ஆனால் சென்றவர் நெடுநேரமாகியும் வரவில்லை. அவரது கணவர், விமான நிலையம் முழுதும் தேடியுள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் அந்த பெண்ணின் கணவர் விமான நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
 
விசாரணையில் இறங்கிய போலீசார், விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தனர். அதில் கழிவறைக்குள் செல்லும் அந்த பெண், சிறிது நேரம் கழித்து புர்கா அணிந்து வெளிய வருவதையும், மேலும் அந்த பெண் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு சென்று, அங்கு அவருக்காக காத்திருக்கும் ஒரு வாலிபருடன் செல்வதும் பதிவாகியிருந்தது.
 
கழிவறையிலிருந்து புர்கா அணிந்து வெளியே வரும் பெண் தன்னுடைய மனைவியைப் போல்தான் உள்ளது என்று அந்த நபரும் கூற, அந்த பெண் தன்னுடைய காதலனுடன் சென்று விட்டார் என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.