ரூ.1 லட்சம் கோடியில் பிரம்மாண்ட மும்பை – டெல்லி அதிவிரைவு சாலை! என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?
இந்தியாவிலேயே முதல்முறையாக ரூ.1 லட்சம் கோடி செலவில் டெல்லி – மும்பை இடையே அதிவிரைவு சாலை அமைக்கப்பட உள்ளது.
நாட்டின் உள்கட்டமைப்புகளான சாலைகள், விமான தளங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றை நவீனமாக கட்டமைப்பதில் மத்திய அரசு ஈடுபாடு காட்டி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் ரூ.1 லட்சம் கோடி செலவில் மும்பை – டெல்லி இடையே 1,386 கி.மீ தொலைவிற்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய அதிவிரைவு சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக நீளமான இந்த அதிவிரைவு சாலையில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன தெரியுமா?
இந்த அதிவிரைவுசாலை மும்பையிலிருந்து தொடங்கி மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி ஆகிய 6 மாநிலங்களை கடந்து செல்கிறது. இடையே முக்கிய நகரங்களான கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா, சூரத் வழியாக கடந்து செல்கிறது.
இந்த திட்டத்திற்காக மேற்கண்ட 6 மாநிலங்களில் இருந்து 15 ஆயிரம் ஹெக்டேர் நிலம் கையப்படுத்தப்பட்டுள்ளது. நிலத்தை கையகப்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு நிகர சந்தை விலையை விட ஒன்றரை மடங்கு அதிகம் விலை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையை பசுமையாக மாற்ற 20 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லி – மும்பை அதிவிரைவு சாலை பணிகளுக்காக 80 லட்சம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த சாலையை அமைக்க 12 லட்சம் டன் உருக்கு பயன்படுத்தப்படுகிறது.
பயணிகளில் பயண அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக 94 வகையான வசதிகளை வழித்தடங்களில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
8 வழி அதிவிரைவு சாலையான இந்த டெல்லி – மும்பை அதிவிரைவுச்சாலை எதிர்காலத்தில் 12 வழி சாலையாக விரிவுப்படுத்தப்பட உள்ளது.
மொத்தம் 1,386 கி.மீ கொண்ட இந்த சாலையை 12 மணி நேரத்தில் கடக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதனால் இதுவரையிலான பாதை வழி பயணத்தில் 12% தூரம் குறைவதுடன் எரிபொருளும் மிச்சப்படும்.
93 பிரதமர் கதிசக்தி பொருளாதார மையங்கள், 13 துறைமுகங்கள், 8 விமான நிலையங்கள், 8 தளவாட பூங்காக்கள் இந்த அதிவிரைவு சாலையால் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K