புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
புதுச்சேரியில் பாஜக சார்பில் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக ஆளுநர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஆனால், விதிமுறைகளை மீறி கிரண்பேடி செயல்பட்டார் எனக்கூறிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், கிரண்பேடியின் நியமனத்துக்கு தடை விதிக்க கோரி புதுச்சேரி எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது அளித்துள்ள தீர்ப்பில் ‘ஆளுநர் எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்தது செல்லும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டது. புதுச்சேரி சட்டபேரவைக்குள் அவர்களை அனுமதிக்க முடியாது என்ற சபாநாயகரின் உத்தரவுக்கும் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதுவை அரசு மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.