ஐதராபாத்திலிருந்து பெங்களூருக்கு வந்தடைந்த காங் - மஜத எம்.எல்.ஏக்கள்
ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தடைந்தனர்.
ஆட்சி அமைக்க காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும், பெரும்பான்மை இல்லாத பாஜகவை சேர்ந்த எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்
இதை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நாளை மாலை 4 மணிக்கு(அதாவது இன்று மாலை 4 மணிக்கு) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.
குதிரை பேரத்தை தடுக்க காங் - மஜத எம்.எல்.ஏக்கள் பெங்களூரில் ஒரு ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் ஐதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று கர்நாடக சட்டப்பேரவை கூடுகிறது. மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையொட்டி ஐதராபாத்தில் இருந்த, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி எம்.எல்.ஏக்கள் பேருந்து மூலமாக இன்று காலை பெங்களூரு வந்தனர். பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.