செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (15:46 IST)

பதஞ்சலி நிறுவனத்திற்கு செக்.! 14 பொருட்களுக்கு உத்தராகண்ட் அரசு தடை..!

Patanjali
தவறான விளம்பரங்கள் செய்த புகாரில் பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருட்களின் தயாரிப்புக்கு, தடைவிதித்து உத்தராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
 
யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் இணைந்து தொடங்கிய பதஞ்சலி நிறுவனம், பல்பொடி, சோப்பு, உணவுப் பொருட்கள் என பல்வேறு பொருட்களை ஆயுர்வேத முறைப்படி தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆயுர்வேத தயாரிப்பு குறித்து விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம், கொரோனா மருந்து குறித்து தவறான தகவல்களை தெரிவித்திருந்ததாக கூறி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, அந்த விளம்பரங்களை நிறுத்துமாறு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், விளம்பரங்கள் நிறுத்தப்படவில்லை
 
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்ததால், தவறான தகவல்களுக்காக மன்னிப்பு கேட்பதாக, பதஞ்சலி நிறுவனம் தெரிவித்தது. ஆனால், இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், பதஞ்சலி நிறுவனர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், பத்திரிகைகளில் மன்னிப்பு விளம்பரம் வெளியிடவும் உத்தரவிட்டது. இதையடுத்து, பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா சார்பில், மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதோடு, பத்திரிகைகளிலும் சிறிய அளவில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
 
ஆனால், இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மன்னிப்பு என்பது வெறும் பெயரளவிலேயே இருப்பதாகவும், இதை மன்னிப்பாக ஏற்க முடியாது என்றும் நிராகரித்தனர். இதையடுத்து, பத்திரிகைகளில் முழு பக்க அளவில் பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு விளம்பரத்தை வெளியிட்டது.

 
இந்நிலையில் திருஷ்டி கண் மருந்து, ஸ்வாசரி கோல்டு, லிபிடோம் உள்ளிட்ட 14 மருந்துகளின் உற்பத்திக்கு உத்தராகண்ட் அரசு தடைவிதித்துள்ளது. இது குறித்த தகவல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாகவும், உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது.