தகுதியானவர்களுக்கு மட்டும் மகளிர் உதவித்தொகை.. திமுக அரசு போலவே டெல்லி பாஜக அரசு அறிவிப்பு..!
டெல்லியில் பாஜக அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், மகளிர்க்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.2500 வழங்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி முதல் இந்த பணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில், அவர்கள் கூறிய வாக்குறுதிகளில் ஒன்றான மாதந்தோறும் மகளிர் ரூ.2500 வழங்கும் திட்டம் மார்ச் 8 மகளிர் தினம் முதல் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் துஷ்யந்த் கௌதம் செய்தியாளர்களிடம் பேசிய போது, பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையில் போலி பெயர்களை தவிர்ப்பதற்காக பல நிலை சரிபார்ப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதன்படி, மகளிர் திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் பதிவு செய்வதற்காக ஒரு ஐடி தளம் தயாராக உள்ளது. இந்த தளத்தில் தேர்வு செய்யப்படும் தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
தமிழகத்திலும், திமுக அரசு அனைத்து மகளிருக்கும் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறிய பின்னர், தகுதியான பெண்களுக்கு மட்டுமே அந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று மாற்றிக் கூறியது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran