திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 மார்ச் 2018 (12:10 IST)

ஆபரேஷன் ராவணா ; தமிழகத்தில் கால்பதிக்க ரூ.4,800 கோடி? : பாஜக பலே திட்டம்

2019 மக்களவைத் தேர்தலில் தென் இந்தியாவில் கால் பதிக்க பாஜக ரூ.4,800 கோடி செலவிட திட்டமிட்டிருப்பதாக தெலுங்கு நடிகர் சிவாஜி பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.

 
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது குஜராத்தில் 3 முறை தொடர்ந்து முதல்வரான நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பாஜக களம் இறங்கியது. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து சமூக வலைத்தளங்கள் மூலம் மோடியின் மதிப்பை இளைஞர்களிடையே உயர்த்தியது என முன்பே செய்திகள் வெளியானது.
 
அந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி பாஜக குறித்து பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
இந்நிலையில், நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சிவாஜி 20 நிமிடம் அடங்கிய ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தேசிய கட்சிகள், மாநில கட்சிகளின் உதவியுடன் தென் மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க எப்படி திட்டம் இடுகிறது என்பது பற்றி விளக்கியுள்ளார். 2019ம் ஆண்டுக்குள் தென் இந்தியாவை வளைப்பதே எங்கள் நோக்கம் என தேசிய கட்சியை சேர்ந்த கல்யாண்ஜி என்னிடம் கூறினார்.  ஆந்திரா, தெலுங்கானாவிற்கு ‘ஆபரேஷன் கருடா’ என்பவும், கர்நாடகாவிற்கு ‘ஆபரேஷன் குமாரா’ எனவும், தமிழகத்திற்கு ‘ஆபரேஷன் ராவணா’ எனவும் பாஜக பெயர் சூட்டியுள்ளதாக அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஸ்லீப்பர் செல்கள் மூலம் அரசியல் சித்து விளையாட்டுகள் தொடங்கப்படும். மக்களை குழப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரப்பப்படும். இதற்காக ஒரு தனி அமைப்பே செயல்படுகிறது. மொத்தமாக இந்த திட்டத்திற்கு பாஜக ரூ.4,800 கோடி செலவிட இருக்கிறது என்கிற அதிர்ச்சி தகவலையும் அவர் கூறியுள்ளார்.