சட்டமன்றத்தில் அமளி: குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட பாஜக எம்.எல்.ஏக்கள்..!
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றம் இன்று காலை கூடிய நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கோரிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 வது சட்டப்பிரிவு கடந்த 2019 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்த தேர்தலில், தேசிய மாநாடு கட்சியை கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்றார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அந்த தீர்மானத்திற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கூடியதும், அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் பதட்ட நிலை ஏற்பட்டது. பாஜக எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதனை அடுத்து பாஜக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran