Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:24 IST)
‘பாகுபலி’ ஸ்டைலில் ஆந்திர தலைநகரம் - ராஜமௌலிக்கு சந்திரபாபு நாயுடு கோரிக்கை
பாகுபலி பட ஸ்டைலில் ஆந்திராவின் புதிய தலைநகரை வடிவமைக்குமாறு டைரக்டர் ராஜமௌலியிடம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியை பல கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக அமைக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். பழமையும், புதுமையும் கலந்து அமராவதி நகரை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பெரிய வெற்றியைப் பெற்ற ‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட அரண்மனை, கோபுரங்கள், மாடங்கள், கட்டிட வடிவமைப்புக்கள் சந்திரபாபு நாயுடுவை மிகவும் கவர்ந்துள்ளதாம்.
இதனால் அமராவதி நகருக்கான மாதிரி வடிவத்தை பாகுபலி ஸ்டைலில் உருவாக்கித் தருமாறு பாகுபலி பட டைரக்டர் ராஜமௌலியிடம், சந்திரபாபு நாயுடு கேட்டுள்ளார்.
இதை ஏற்றுக் கொண்ட டைரக்டர் ராஜமவுலி, ஏப்ரல் மாதம் வரை ‘பாகுபலி-2’ பட வேலைகள் இருப்பதால், அதன்பிறகு புதிய நகரத்துக்கான வடிவமைப்பை தயாரித்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக ஆந்திர பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.