குழந்தைகளை வாட்ச்மேன் ஆக்க… மோடிக்கு வாக்களியுங்கள் – அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து !
பிரதமர் மோடியின் சவ்கிதார் பிரச்சாரத்துக்கு நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நரேந்திர மோடி, நாட்டில் யாரும் ஊழல் செய்ய விடமாட்டேன், நானும் ஊழல் செய்யமாட்டேன். தேசத்தின் காவலாளியாக இருப்பேன் என்று பேசியிருந்தார். ஆனால் இப்பொழுது ரஃபேல் ஊழலில் மத்திய அரசுக்கும் தொடர்பு இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர் குற்றம் சாட்டி வருகிறார். மேலும் தன்னைக் காவலாளி எனக் கூறிவரும் பிரதமர் ஒரு திருடன் எனக் கூறிவருகிறார்.
இதனால் பிரதமர் மோடி தனது பெயரை டிவிட்டடில் சவுகிதார் (காவலாளி) நரேந்தர மோடி என மாற்றியுள்ளார். மேலும் ‘உங்களுடைய காவலாளிக்கு ஆதரவாகவும், தேசத்துக்குச் சேவை செய்யும் துணையாகவும் இருங்கள். நான் தனியாக இல்லை. ஊழலுக்கும், தேசத்தில் சமூகக் கொடுமைக்கும் எதிராகப் போராடும் ஒவ்வொருவரும் காவலாளிதான். ஆதலால், காவலாளியாகிய நான் தனியாக இல்லை. தேசத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளிதான். இன்று ஒவ்வொரு இந்தியரும் நானும்கூட காவலாளிதான் என்று கூறுகிறார்கள்’ என மக்களையும் துணைக்கு சேர்த்துக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து மார்சி 31 ஆம் தேதி மோடி சவுகிதார் பிரச்சாரத்தைத் தொடங்க இருக்கிறார்.
இதனை எதிர்க்கட்சிகள் மற்றும் இணையவாசிகள் எனப் பலரும் சரமாரியாகக் கலாய்த்து வருகின்றனர். அதையடுத்து இப்போது டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இப்போது சவுகிதார் பிரச்சாரம் குறித்து பேசியுள்ளார். அதில்’ ஓட்டுமொத்த நாட்டையும் காவல்காரராக (வாட்ச்மேன்) மாற்ற பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார். மக்கள் தங்கள் குழந்தைகளைக் வாட்ச்மேனாகப் பார்க்க விரும்பினால், அவர்கள் தாராளமாக மோடிக்கு வாக்களிக்கலாம். ஆனால், தங்கள் குழந்தைக்கு நல்ல கல்வி தேவை, எதிர்காலத்தில் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ மாற வேண்டும் என்று மக்கள் விரும்பினால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.