விஸ்வரூபம் 2' திரைவிமர்சனம்
கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் ஐந்து வருடங்கள் கழித்து இன்று இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் புரமோஷன் முதல் பாகம் அளவுக்கு இல்லை. மேலும் முதல் பாகம் போல் இந்த படத்திற்கு எதிர்ப்பும் இல்லாததால் இலவச விளமபரங்களும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் ரசிகர்களை கவருமா? என்பதை பார்ப்போம்
உளவுத்துறையான 'ரா' என்ற அமைப்பின் அதிகாரிகளான கமல்ஹாசன், சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோர் அமெரிக்காவில் இருந்து தப்பியோடிய உமர் என்ற தீவிரவாதியை தேடி வருகின்றனர். உமர், கமல் குழுவினர்களை கொலை செய்ய பலவித முயற்சி செய்கிறார். இந்த நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டன் கடலில் செயற்கையாக பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்படுத்தி லண்டன் முழுவதையும் அழிக்க உமர் திட்டமிடுகிறார். இதனை கண்டுபிடிக்கும் ரா உளவாளிகள் எப்படி தடுக்கின்றனர். அதன்பின்னர் என்ன ஆகின்றது என்பதுதான் கதை.
கமல்ஹாசனின் நடிப்பை விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரு நாள் போதாது. இண்டர்நெட்டில் பல ஜிபிகளுக்கு அவருடைய நடிப்பை விவரித்து கொண்டே செல்லலாம். இந்த படத்தில் கமல் வளவள என பேசாமல் சின்ன சின்ன வசனங்களில் பெரிய பெரிய விஷயங்களை கூறியுள்ளார். அதை எழுத்தால் எழுதினால் புரியாது. காட்சியுடன் சேர்ந்து பார்த்தால்தான் புரியும். கமல் ஒரு மாபெரும் சினிமா ஞானி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
குறிப்பாக 'தூங்காதே தம்பி தூங்காதே' படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் படத்தில் நீளமான அம்மா செண்டிமெண்ட் காட்சி இந்த படத்தில் தான் உள்ளது. ஒரு தீவிரவாத ஆக்சன் படத்தில் அம்மா செண்டிமெண்டா? என்று கேட்பவர்கள் படத்தை பார்த்தால் வாயடைத்து போய்விடுவார்கள். அதேசமயம் கமர்ஷியலுக்காக லிப்கிஸ் முத்தகாட்சியும், டூயட் பாடலும், படுக்கையறை காட்சிகளும் இந்த படத்தில் உண்டு
பூஜாகுமாருக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் ஆண்ட்ரியாவுக்கு கொஞ்சம் அழுத்தமான காட்சிகளும், ஆக்சன் காட்சிகளும் உண்டு. ரா உயரதிகாரியான சேகர் கபூரின் நடிப்பும், உமர் என்ற கேரக்டரில் நடித்துள்ள ராகுல் போஸ் நடிப்பும் சூப்பர். அனந்த் மகாதேவன் சில காட்சிகளே வந்தாலும் கைதட்டல் பெறுகிறார்.
ஜிப்ரானின் இசையில் இந்த படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. மூன்றுமே சூப்பர். குறிப்பாக 'நானாகிய நதிமூலமே' பாடல் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை. மேலும் ஜிப்ரான் பின்னணி இசையிலும் ஹாலிவுட் தரத்தில் கொடுத்து கலக்கியுள்ளார். இதுவரை தமிழ்ப் படங்களில் வந்ததில்லை என்று கூறலாம்.
கமல்ஹாசனின் கூர்மையான திரைக்கதையும் வசனங்களும் படத்தின் மிகப்பெரிய பலம். ஆனால் எத்தனை பேர்களுக்கு இந்த படத்தின் கதையும் காட்சிகளும் புரியும் என்பது சந்தேகம். குறிப்பாக பி மற்றும் சி செண்டர் ரசிகர்களுக்கு இந்த படம் போரடிக்க வாய்ப்புண்டு. ஒருசில ஏ செண்டர் ரசிகர்களுக்கும்தான்.
ஆனால் ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ்ப்படம் வராதா? என்று ஏங்கியவர்களை திருப்தி செய்துள்ள படம்தான் 'விஸ்வரூபம் 2'
ரேட்டிங்: 4/5