1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 10 ஜூன் 2017 (16:09 IST)

சத்ரியன் - திரை விமர்சனம்!

விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நாயகன் நாயகியாக நடித்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், யுவன் இசையில் வெளியாகி இருக்கும் படம் சத்ரியன்.


 

 
அமைச்சர் போஸ்டர் நந்தகுமாரின் ஆதரவுடன் திருச்சியை ஆட்டிப்படைக்கிறார் தாதா சரத் லோகிதஸ்வா. என்னதான் தாதாவாக இருந்தாலும், வீட்டில் மகள் மஞ்சிமா மோகன், மகன் சவுந்தர்ராஜனுக்கு அன்பான தந்தையாக இருக்கிறார். 
 
வாழ்க்கை சுமூகமாக செல்ல, எதிர்பாராத விதமாக சரத் லோகிதஸ்வாவின் வளர்ச்சி பிடிக்காத அமைச்சர் நந்தகுமார், திருச்சியின் மற்றொரு ரவுடியான அருள் தாஸ் மூலமாக கொன்று விடுகிறார். இதனால் சரத் லோகிதஸ்வா இடத்திற்கு விஜய் முருகன் வருகிறார். விஜய் முருகனின் நம்பிக்கையான ரவுடி தான் நாயகன் விக்ரம் பிரபு.
 
சரத் லோகிதஸ்வாவை குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் விஜய் முருகன் பார்த்துக் கொள்கிறார். இவ்வாறு இருக்கையில்,  கல்லூரிக்கு செல்லும் மஞ்சிமா மோகனை சிலர் தொந்தரவு செய்கின்றனர். இதையடுத்து மஞ்சிமாவுக்கு பாதுகாப்பாக, விக்ரம் பிரபுவை நியமிக்கிறார் விஜய் முருகன். 
 
மஞ்சிமாவுக்கு தொந்தரவு தருபவர்களை விக்ரம் பிரபு அடித்து உதைக்கிறார். இதை கண்டு மஞ்சிமாவுக்கு அவர் மீது காதல் வருகிறது. ஒருநாள் தனது காதலை விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமா வெளிப்படுத்த, அவளது காதலுக்கு விக்ரம் பிரபு மறுப்பு தெரிவிக்கிறார். 
 
ஆனால், விடாது துரத்தி விக்ரம் பிரபுவை காதலிக்க வைத்து விடுகிறார் மஞ்சிமா. இவர்களது காதல் மஞ்சிமாவின் வீட்டுக்கு தெரிய வர, எதிர்ப்புகள் கிளம்புகின்றன. விஜய் முருகனும் விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமாவை மறந்து விட அறிவுறுத்துகிறார். ஆனால் விக்ரம் பிரபு அவரது பேச்சை கேட்க மறுக்கிறார். 
 
எனவே, வேறு வழியின்றி என்று விக்ரம் பிரபுவை கொல்ல விஜய் முருகன் திட்டமிடுகிறார். விஜய் முருகன் ஒரு புறம் பழைய பகையை மனத்தில் வைத்துக்கொண்டு அருள் தாஸின் ஆட்கள் விக்ரம் பிரபுவை கொல்ல அலைவது மறுபுறம், இதற்கு மத்தியில் மஞ்சிமாவை கரம்பிடிக்க வேண்டிய எண்ணம் என அனைத்தையும் பிற்பாதி கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
 
விக்ரம் பிரபு தனது வழக்கமான பாணியில் நடித்துள்ளார். ரவுடியாக ஒரு பக்கத்தில் மிரட்டினாலும், காதல் காட்சிகளிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மஞ்சிமா மோகன் திரையில் குடும்ப பாங்கான பெண்ணாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது நடிப்பில் குறை ஏதுமில்லை. மற்ற நடிகர்களான சரத் லோகிதஸ்வா, அருள்தாஸ், நந்தகுமார், ஆர்.கே.விஜய் முருகன், சவுந்தர்ராஜன், கவின், ஐஸ்வர்யா தத்தா, ரியோ, யோகிபாபு தங்களது பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.
 
திருச்சியின் பின்புலத்தில் படத்தை உருவாகியிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். ஆக்‌ஷனுக்கும், காதலுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 
 
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வரும் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. 
 
மொத்தத்தில் சத்ரியன் அஞ்சான்.