ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By அண்ணாகண்ணன்
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (14:29 IST)

மேகா - திரை விமர்சனம்

பெண் பார்க்கும் படலம் நடக்கும் இடத்தில், காதலிக்கு அவள் வீட்டிலேயே, அவள் தோழிகள் எதிரிலேயே, இதழோடு இதழ் சேர்த்து முத்தம் கொடுத்துவிட்டு, "ஸாரி, எனக்கு இப்படித்தான் பிரபோஸ் செய்யத் தெரியும்" எனச் சொல்லும் காதலன். இதே துணிச்சலுடன் ஒரு கொலையைத் துப்பறியும் கதை தான், மேகா.
 
மங்காத்தா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் நடித்திருக்கும் அஸ்வின், இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். அவருக்கும் சிருஷ்டிக்கும் இடையே அரும்பும் காதல் தான் முதல் பாதி. தடயவியல் நிபுணராக நடித்திருக்கும் அஸ்வின், தன்னை வளர்த்து ஆளாக்கிய விஜயகுமார் திடீரெனத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தபோது, அது தற்கொலை இல்லை, கொலை எனக் கண்டுபிடிக்கிறார். பல்வேறு தடைகளைத் தாண்டி, அது கொலை என்பதற்கான தடயங்களைச் சேகரித்து நிரூபிப்பதுதான் மிச்சக் கதை.



அஸ்வின் - சிருஷ்டிக்கு இடையிலான காதல், ஒரு செல்லுலாய்டு கவிதை.
 
ஒரு பேருந்து நிறுத்தத்தில் திடீர் மழை. அருகில் நிற்கும் சிருஷ்டியின் குடைக்குள் தஞ்சம் புகுகிறார் அஸ்வின். குடை எடுத்து வராட்டி இப்படித்தான் கஷ்டப்படணும் எனச் சிருஷ்டி சொல்ல, இதில் என்ன கஷ்டம் இருக்கு? கொண்டு வந்திருந்தால், இப்போ உங்க குடைக்குள், இவ்வளவு பக்கத்தில் நான் நின்றிருக்க முடியுமா, என அஸ்வின் கேட்பது, நல்ல தொடக்கம். 
 
அடுத்த முறை உங்களைப் பார்க்கும்போது, எப்படிக் கூப்பிடுவது என அஸ்வின் கேட்க, சிருஷ்டி ஒற்றை விரலால் மேகத்தைக் காட்டுகிறார். மேகா என்ற பெயரை அவர் ஒரு குறியீடாகக் காட்டும் காட்சி அது.
 
பகுதி நேரப் புகைப்படக் கலைஞராக அஸ்வின், சிருஷ்டியின் அண்ணன் திருமணத்தில் படம் எடுக்கப் போகும் போது அடிக்கும் லூட்டி தூள். அவரைத் தனியே படம் எடுத்துத் தள்ளுவதும் கையில் இதய வடிவில் மெகந்தி போட்டு விடுவதும் அவரது ரவிக்கை அளவைத் திருத்துவதற்காக நள்ளிரவில் தையல்காரரிடம் அழைத்துச் செல்வதும் ஒரே இயர்போனில் இருவரும் பாட்டுக் கேட்பதும் மழை பெய்யும் நள்ளிரவில் இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதும் கவித்துவமான காட்சிகள். 
 
அடுத்த நாள், "இவளை அழகாய் ஒரு படம் எடுத்துக் கொடுப்பா. மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பணும்" எனச் சிருஷ்டியின் அம்மா சொல்ல, "அழகாகவா? கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தாலும் பார்க்கிறேன்" என அஸ்வின் சொல்வது சிரிப்பை வரவழைக்கும்.
 
மேலும்

படத்தில் வசனங்களும் மிக நயமாக அமைந்துள்ளன.
 
முன்னே சொன்ன முத்தக் காட்சியில், அருகில் உள்ள தோழிகள் அதிர்ச்சி அடைந்து, "இங்கே நாங்களும் இருக்கோம்" என்கிறபோது, "ஸாரி, உங்களுக்கெல்லாம் கிடையாது. மேகாவுக்கு மட்டும் தான்" என அஸ்வின் சொல்வது நல்ல நகைச்சுவை.
 
அதே காட்சியில் "என்னை உனக்குப் பிடிக்கும் என எனக்குத் தெரியும்" என அஸ்வின் சொல்லுகையில், "எப்படித் தெரியும்" எனச் சிருஷ்டி கேட்கிறார். "என்னைப் பார்க்கும்போது, நீ ரொம்ப அழகாக இருப்பாய்" என அஸ்வின் சொல்வது நளினம். உள்ளூரக் காதலித்தாலும், காதலிக்கும்போது ஒருவர் கூடுதல் அழகாகிவிடுவதை அனுபவித்துச் சொல்லும் இடம் இது.
 
ஒரு பூங்காவில் அஸ்வின், சிருஷ்டியிடம் முத்தம் கேட்க, "பொது இடத்தில் இதெல்லாம் கூடாது" என அவர் சொல்ல, அவரது இதழைப் பிடித்து, "இது பொது இடமா? எனக்கு மட்டுமேயான இடமாச்சே" என அஸ்வின் சொல்வது, அடுத்த பஞ்ச்.

 
காதல் அத்தியாயம் ஒரு புறம் பிரமாதப்படுத்த, திரில்லர் மறு புறம், படத்துக்கு விறுவிறுப்பு ஏற்றுகிறது. தடயவியல் நிபுணராக, கொலையாளி விட்டுச் சென்ற தலைமுடியை வைத்துத் துப்பறிவது, சுவாரசியம். 
 
அஸ்வின், தமிழில் அடுத்த சாக்லேட் பாயாக உருவாக வாய்ப்புண்டு. அழகும் உறுதியும் தெளிவும் கம்பீரமும் அவர் பாத்திரத்தில் வெளிப்படும் அளவுக்குச் சிறப்பாக நடித்துள்ளார். நாயகியாக நடித்துள்ள சிருஷ்டி, மென்மையாக, இனிமையாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அங்கனா ராய், ஒய்.ஜி மகேந்திரன், ஜெய்பிரகாஷ், விஜயகுமார், ரவிபிரகாஷ், மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள். காதல் என்பது ஒரு மருந்து, அதுவே மருத்துவம் என்பதை ஒய்.ஜி.மகேந்திரன் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
 
அறிமுக இயக்குநர் கார்த்திக் ரிஷி, சுப்ரமணிய சிவாவிடம் அசோசியேட்டாக பணிபுரிந்திருக்கிறார். இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் திட்டமிட்டு, செதுக்கி எடுத்திருக்கிறார். லியனார்டோ டாவின்சியின் ஓவியங்களில் உள்ள நிறங்களை மாதிரியாகக் கொண்டு, படத்துக்கு லைட்டிங்கும் கலை அமைப்பும் செய்திருப்பது புதுமை. இந்த அளவுக்கு மெனக்கெட்டு ஆராய்ந்து, அதைத் திரையில் கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.பி குருதேவ் பாராட்டுக்கு உரியவர். ராம் சுதர்ஷனின் படத் தொகுப்பும் நன்று.
 
இசைஞானி இளையராஜா, படத்தின் தன்மைக்கு ஏற்பச் சிறப்பாக இசையமைத்துள்ளார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெறாமல் போன ‘புத்தம் புது காலை’ பாடல், இந்தப் படத்தில் டிஜிட்டல் இசையாக, அழகிய முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. மூன்றே அறைகள் கொண்ட வீட்டில் எடுக்கப்பட்ட பாடலும் கவர்கிறது. இளையராஜா, இந்தப் படத்திற்கு 12 நாட்கள் தொடர்ந்து பின்னணி இசை அமைத்து, படத்தை மேலும் மெருகேற்றியுள்ளார். மேலும் துல்லியமான ஒலிப்பதிவுக்காக, டால்பி அட்மாஸ் (Dolby Atmos) என்ற புதிய தொழில்நுட்பம், இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகியுள்ளது.
 
கிரைம் தொடர்பான சில காட்சிகளில் பழைய நெடி அடிப்பதைத் தவிர்த்திருக்கலாம். அதே போல், கிளைமாக்ஸை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். காவல் துறை அதிகாரியைக் கொன்றவர், அந்த வழக்கிலிருந்து எப்படித் தப்பினார் என்பதையும் எங்காவது சொல்லியிருக்கலாம். 

எனினும், சதையை நம்பாமல் கதையை நம்பியதற்கும் அரைத்த மசாலாவையே மீண்டும் அரைக்காமல் புதுமையைத் தேடியதற்கும் இந்தப் படக் குழுவினரை அவசியம் பாராட்ட வேண்டும்.

மேகா - திரைப்படக் காட்சிகள்