ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (14:22 IST)

ஹவுஸ் ஓனர்: திரைவிமர்சனம்

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே மற்றும் அம்மணி போன்ற படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள அடுத்த படம் தான் 'ஹவுஸ் ஓனர்'. இந்த படம் வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்
 
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்ட காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. கிஷோர், ஸ்ரீரஞ்சனி ஆகிய இருவர் மட்டுமே தனி வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் மழை, வெள்ளத்தில் படும் கஷ்டங்களை கவிதை நயத்துடன் இயக்குனர் கூறியிருப்பதுதான் இந்த படத்தின் கதை
 
ஞாபகமறதி நோயால் பாதிப்பு அடைந்துள்ள கணவர் கிஷோரை வெளியே போகாமல் இருப்பதையும் பார்த்து கொள்ள வேண்டும், உள்ளே அவர் செய்யும் சின்ன சின்ன பிடிவாத குணம் சேட்டைகளையும் பொறுத்து கொள்ள வேண்டும் என்ற கனமான பாத்திரம் ஸ்ரீரஞ்சனி. இதுவரை சின்னச்சின்ன கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த இவருக்கு அளித்த முக்கியத்துவமான வேடத்தை புரிந்து நடித்துள்ளார். இவருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்
 
கிஷோர் தான் இந்த கதையின் ஹீரோ. இவரது நடிப்புத்திறமை அனைவரும் அறிந்ததே. ஓய்வு பெற்ற ராணுவ வீரராக, 40 வருடங்களுக்கு முன் நடந்ததை மட்டும் ஞாபகம் வைத்திருக்கும் ஒரு கேரக்டராக, மனைவியிடம் சின்னச்சின்ன சண்டை போடுபவராக இவர் நடித்துள்ளது சிறப்பு
 
சிறுவயது கிஷோர், ஸ்ரீரஞ்சனியாக 'பசங்க' கிஷோரும், லவ்லின் சந்திரசேகரும் நடித்துள்ளனர். அப்படி ஒரு கியூட்டான ஜோடி என்று சொல்லும் அளவுக்கு கனகச்சிதமான நடிப்பு. பிராமின் கலாச்சாரத்தை வெகு அழகாக வெளிப்படுத்தும் திருமண காட்சிகள் வியக்க வைக்கின்றது.
 
ஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்களும், பின்னணி இசையும் மிக அருமை. குறிப்பாக வெள்ள நீர் வீட்டிற்கு வந்தபின்னர் கிஷோர், ஸ்ரீரஞ்சனி இருவரும் தத்தளிப்பதும், அதன் பின்னர் ஏற்படும் முடிவுகளுக்கும் பின்னணி இசை சூப்பர்
 
கிருஷ்ண சேகரின் ஒளிப்பதிவு பிரேம்குமாரின் படத்தொகுப்பும் கச்சிதம். மழை வெள்ள காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் வெகு அருமை
 
இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு இயக்குனராக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இந்த படத்தை வெற்றிப்படமாக்க வேண்டிய கடமை ரசிகர்களுக்கு உள்ளது. சென்னை வெள்ளத்தில் சிக்கி கொண்ட அனுபவத்தை நம்மில் பலர் அனுபவித்திருப்போம். பலர் கேள்விப்பட்டிருப்போம். இந்த நினைவுகளை மீண்டும் நம் மனதில் கொண்டு வரும் படமாக இந்த படம் இருப்பது மட்டுமின்றி ஒரு அழகான இளமைக்காதல், முதுமைக்காதலை படத்தில் ஆங்காங்கே வெளிப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. இயற்கை முன் யாரும் வெற்றி பெற முடியாது. இயற்கை இயற்கைதான் என்பதை அழுத்தமாக சொல்லும் இந்த படத்தை கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும்.
 
ரேட்டிங்: 4/5