நடிக்க வரும் ஒவ்வொரு புதுமுகங்களை பற்றியும் அனைவருக்கும் ஓர் அபிப்ராயம் இருக்கும். நல்லா நடிக்கிறாங்க, பெரிய ரவுண்ட் வருவாங்க என்று கொண்டாடப்படுகிறவர்கள் காணாமல் போவதும், கதை முடிந்தது என்று நினைத்தவர்கள் காலங்கடந்தும் வாழ்வதும் சினிமாவின் மாயாஜாலங்களில் ஒன்று. அறிமுகமாக இருக்கையில் அவர்களை குறித்து எழுதப்படும் ஜாதகங்களை பல வருடங்கள் கழிந்து படிப்பதில் இருக்கும் சுவாரஸியமே தனிதான்.
1965 -ல் சினிமாவில் அறிமுகமான தேங்காய் சீனிவாசன் குறித்து 1967 -இல் ஒரு பிரபல சினிமா பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. சும்மா சொல்லக் கூடாது. இரண்டு வருடத்திலேயே தேங்காய் சீனிவாசனின் திறமையை நச்சென்று கணித்திருக்கிறார்கள்.
தேங்காய் சீனிவாசன்
கலைவாணர் என்.எஸ்.கே.யின் சீடர்களில் ஒருவர் தங்கவேலு.
கலைவாணர் ராமசாமி என்ற ஹாஸ்ய நடிகருக்கு, புளிமூட்டை என்ற பெயரை வைத்து புளிமூட்டை ராமசாமியாக்கினார்.
கலைவாணரின் சீடரான தங்கவேலு, அந்தக் குருவின் வழியிலேயே சென்று, ஹாஸ்ய நடிகர் சீனிவாசனை, தேங்காய் சீனிவாசனாக்கி விட்டிருக்கிறார்.
கல்மனம் என்ற நாடகத்துக்கு தலைமை வகித்த தங்கவேலு, அதில் தேங்காய் வியாபாரியாக வந்து, ஹாஸ்ய வெடிகளை தாராளமாகவே தூக்கிப் போட்டு வெடித்துக் கொண்டிருந்த சீனிவாசனின் நடிப்பைப் பார்த்துவிட்டு, நான் சாதாரணமாக சிரிக்க மாட்டேன். ஆனால் இவரது நடிப்பு என்னை விலா எலும்பு உடையும் அளவுக்குச் சிரிக்க வைத்து விட்டது என்று மனதாரப் பாராட்டியதுடன், தேங்காய் வியாபாரியாக நடித்த இவரை, தேங்காய் சீனிவாசன் என்றே அழைப்போம் என ஒரு பட்டத்தையும் கொடுத்துவிட்டார்.
சீனிவாசனுடன் தேங்காய் ஒட்டிக் கொண்டது, கூடவே அதிருஷ்டமும் ஒட்டிக் கொண்டது.
தேங்காய் சீனிவாசன் மளமளவென்று முன்னேற ஆரம்பித்தார்.
மேடையில் இவரது நடிப்பை கண்ட தயாரிப்பாளர் பெர்னாண்டஸ், தனது ஒரு விரல் மர்மப் படத்தில் இவருக்கு சந்தர்ப்பம் அளித்தார்.
ஒரு விரல் வந்தது. ஒரு புதிய ஹாஸ்ய நடிகரும் திரையுலகுக்கு கிடைத்தார்.
தற்போது தயாராகி வரும் பல படங்களில் ஹாஸ்ய நடிகராக தேங்காய் சீனிவாசன் ஒப்பந்தமாகி, நடித்து வருகிறார்.
தேங்காய் சீனிவாசன் இளைஞர்.
முன்னேறி வரும் நல்லதொரு ஹாஸ்ய நடிகர்.
- அந்தப் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது போலவே நகைச்சுவையில் தேங்காய் சீனிவாசன் கொடிகட்டிப் பறந்தார். அவரது திறமையை தெரிந்து கொள்ள பாலசந்தர் இயக்கிய தில்லு முல்லு படத்தில் தேங்காய் சீனிவாசனின் நடிப்பையும், அப்படத்தின் ரீமேக்கில் தேங்காய் சீனிவாசனின் வேடத்தில் நடித்த பிரகாஷ்ராஜின் நடிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் போதும். தேங்காய் சீனிவாசனின் திறமையும், ஹாஸ்யம் என்பதன் அர்த்தமும் விளங்கும்.
சிவகுமார் அனைவரும் மதிக்கும் நடிகர். சினிமாவில் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர் என்று சிவகுமாரையும், டி.ஆரையுமே சொல்வார்கள். இன்று அவரது குடும்பம்தான் தமிழ் சினிமாவில் கோலோச்சுகிறது. ஆரம்ப நாட்களில் அவரைப் பற்றிய மதிப்பீடு எப்படி இருந்தது? தெரிந்து கொள்ள அறுபதுகளின் இறுதியில் வந்த சினிமா பத்திரிகையில் அவரைப் பற்றிய குறிப்பை பார்க்கலாம்.
சிவகுமார்
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் பழனிச்சாமி என்ற பெயரில் பட்டணத்துக்கு வந்தவர். படவுலகம் இவரை சிவகுமார் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உலவவிட்டிருக்கிறது.
ஓவியக் கலையில் நல்ல திறமைப் படைத்த இவரை டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சுதான் முதலில் திரைக்குத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அறிமுகப்படுத்தியது முருகன் சகோதரர்கள். படம், காக்கும் கரங்கள்.
கதாநாயகனின் முடமான தங்கையை ஏற்கும் டாக்டராக இதில் வந்த சிவகுமாரைப் பார்த்து கேட்கப்பட்ட கேள்வி, வாட்ட சாட்டமாக இருக்கும் இந்த இளைஞர் யார்?
கேள்வியைத் தொடர்ந்து வந்த வாக்கியம், பரவாயில்லை, நன்றாகவே நடித்திருக்கிறார்.
அந்த ஒரு கேள்வியும், இந்த வாக்கியமும், படவுலகில் முன்னேறத் துடிக்கும் ஒரு திறமைமிக்க நடிகருக்குப் போதாதா?
சிவகுமாரின் ஆர்வம் வளர்ந்தது.
நான் ஒரு கலைஞன். எனக்குப் பலவிதமான கனவுகள் எழுவதுண்டு. சிறந்த ஓவியனாக வரவேண்டும். சிறந்த நடிகனாக வர வேண்டும் என்ற கனவுகள் அவற்றில் உண்டு என்று சொல்கிறார் சிவகுமார். அவரது ஓவியத்திறமை ஊரறிந்த ரகசியம். நடிப்புத் திறமையும் நாடறிந்த செய்தி. இக்கலைஞரின் கனவுகள் பலித்துத்தான் வருகின்றன.
சிவகுமார் குறித்த இந்த செய்திகள் ஆச்சரியமாக உள்ளன. அறிமுகமாகும் போதே தனது கனவுகளில் உறுதியாக இருந்திருக்கிறார். என்னுடைய கனவுகளில் ஒன்று சிறந்த நடிகனாவது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். அப்படிப்பட்டவர் சமீபத்தில், நடிகன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வெட்கப்படுகிறேன் என்று சொன்னது ஏன்? எதற்காக அப்படிச் சொன்னார்? அறிமுகமாகும் போது லட்சிய கனவாக இருந்தது எப்போது கசப்பாக மாறியது?
சிவகுமார் விளக்கினால் சினிமா குறித்த புரிதல் நமக்கு இன்னும் விசாலப்படலாம்.