செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. சிவராத்திரி ஸ்பெஷல்
Written By Sasikala

சிவராத்திரி விரத மகிமையை போற்றும் வேடனின் கதை....

சிவராத்திரி விரத மகிமை குறித்துப் பல கதைகள் உள்ளன. அவற்றிலொரு சுவாரசியமான கதையைக் பற்றி தெரிந்து  கொள்வோம். மகாசிவராத்திரி தினத்தில் வியாதன் என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். நாள் முழுவதும் அலைந்தும் ஒரு மிருகமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. பசியால் வாடிக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரை எண்ணி  வருந்தினான்.

 
வேடன் வழியிலிருந்த நீர்நிலையில் நீர் அருந்தினான். ஏதாவது மிருகம் அந்த நீர்நிலைக்கு வரும். அதைக்கொன்று  எடுத்துச்செல்லலாம் என்ற நம்பிக்கையுடன், சிறிது நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரத்திலேறி  உட்கார்ந்துகொண்டான். அது வில்வ மரம் என்பதும், அதன்கீழ் ஒரு சிவலிங்கம் இருப்பதும் அவனுக்குத் தெரியாது. வேடன்  உறங்காமல் மிருகத்துக்காகக் காத்திருந்தான். 
 
அப்போது ஒரு பெண்மான் நீர்நிலைக்கு வந்தது. அது முதல் சாமம் முடிவடையும் நேரம். மானைக் கண்ட வேடன் அம்பை  எடுத்து வில்லில் பூட்டினான். அவனது அசைவினால் ஒரு வில்வ இலையும் சிறிது தண்ணீரும் மரத்தின் கீழிருந்த  சிவலிங்கத்தின்மீது விழுந்தன. வேடன் தன்னை குறிபார்ப்பதை அறிந்த மான், "''வேடனே, என் இளம்குட்டிகள் என்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். எனக்கு கொஞ்சம் அவகாசம் தா என்றது. மானின் வேண்டுகோளுக்கு வேடன் இசைந்  தான். மான் தன் இருப்பிடம் நோக்கி ஓடியது.
 
அந்த மானை எதிர்பார்த்து தூங்காமல் காத்துக்கொண்டிருந்தபோது, மற்றொரு பெண் மான் தண்ணீர் பருக வந்தது.  அதைக்கொல்ல அம்பை எடுத்த போது வில்வ இலையும் தண்ணீரும் லிங்கத்தின்மீது விழுந்தன. அது இரண்டாவது சாமம்  முடிவடையும் நேரம். ஓசையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த மான் வேடன் தன்மீது குறிவைப்பதைக் கண்டு திகைத்து, "''வேடனே, என்னைக் கொல்லாதீர்கள். 
 
என் மூத்தாளைத் தேடி இங்குவந்தேன். அவள் குட்டிகள் என் பொறுப்பில் இருக்கின்றன. அவற்றை அவளிடம்  ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு நீங்கள் என்னைக் கொல்லலாம்`' என்றது. வேடன் அதற்கும் அனுமதி தந்தான்.
 
மூன்றாம் சாமம் முடியும் வேளையில் ஒரு ஆண் மான் நீர் பருக வந்தது. அதைக்கண்ட வேடன் வில்லை எடுத்தபோது, வில்வ  இலையும் சிறிது நீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன. வேடன் தன்னைக் கொல்லப் போவதை அறிந்த ஆண்  மான், "''ஐயா, என் இரு மனைவிகளையும் குட்டிகளையும் தகுந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு என்னைக்  கொல்லுங்கள்'' என்று கெஞ்சிக் கேட்டது. அதற்கும் அனுமதியளித்த வேடன், அந்த மான்கள் ஒன்றின்மீது ஒன்று வைத்திருக்கும்  பாசத்தை எண்ணி வியந்தபடி, மான்களை எதிர்பார்த்து உறங்காமல் மரத்தில் அமர்ந்திருந்தான்.
 
இப்படி மூன்று மான்களுமே விவாதித்தன. இறுதியில் மூவருமே வேடனிடம் செல்வதென்று தீர்மானித்தன. பெற்றோர்கள்  பலியாகச் செல்லும்போது தாங்களும் உயிர்வாழ விரும்பவில்லை எனக்கூறி, குட்டி மான்களும் அவற்றைப் பின்தொடர்ந்து  சென்றன. 
 
நான்காவது சாமம் முடிவடையும் நேரம். மான்கள் கூட்டமாக வருவதைக் கண்ட வேடன் மகிழ்ந்து வில்லையும் அம்பையும்  எடுத்தபோது, சிவலிங்கத்தின்மீது தண்ணீரும் வில்வ இலையும் விழுந்தன. நான்கு சாமங்களிலும் மரத்தின் கீழிருந்த  சிவலிங்கத்திற்கு பூஜை செய்கிறோம் என்றோ, பூஜையின் மகிமை பற்றியோ அறியாமல் வேடன் பூஜை செய்திருக்கிறான். 
 
நித்திரையின்றி செய்த இந்த பூஜையின் காரணமாக சிவனருள் கிட்டி, அவனுக்கு ஞானம் பிறந்தது. அப்போது சிவபெருமான்  அங்கு காட்சியளித்து, "வேடனே, உன்னையறியாமல் செய்திருந்தாலும், சிவராத்திரி விரதமிருந்த பலன் உன்னைச் சேரும்.  அதன்காரணமாக உனக்கு தரிசனம் தந்தேன். 
 
நீ வேண்டும் வரத்தைக் கேட்கலாம்`' என்றார். ஈசனைப் பணிந்த வேடன், "ஐயனே, என் பாவங்களைப் போக்கியருள வேண்டும்`'  என்றான். அவ்வாறே அருளிய சிவபெருமான், பல செல்வங்களையும் அவனுக்கு வழங்கி, "''வேடனே, இனி உன் பெயர் குகன்  என்று வழங்கப்படும். ஸ்ரீமந் நாராயணன் சிறிதுகாலத்தில் இப்பூவுலகில் பிறந்து இங்குவருவார். 
 
அவர் உன்னை சகோதரராக ஏற்றுக்கொள்வார்'' என்று ஸ்ரீராமர் அவதாரத்தை குறிப்பிட்டுக் கூறி, சிவராத்திரி விரதத்தின்  மகிமையை விவரித்து மறைந்தார். சிவ தரிசனம் கிட்டிய அந்த மான்களும் மிருக உடலை விடுத்து திவ்ய ரூபம் பெற்று  சிவபதவி அடைந்தன. வியாதன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் வியாதேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக வரலாறு.