1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.லெனின் அகத்தியநாடன்
Written By அ.லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 21 மார்ச் 2016 (16:06 IST)

சாதிய கொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது த்ரிஷாவா? முதலமைச்சரா?

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை [13-03-16] அன்று காதல் திருமணம் செய்துகொண்டதால் உடுமலைப்பேட்டை சங்கர் மற்றும் அவரது மனைவி கவுசல்யா இருவரையும் அவரது பெற்றோர்களே கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அதில் சங்கர் உயிரிழந்ததும், தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் கவுசல்யா மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதும் நாம் அறிந்ததே.
 

 
இதனையடுத்து சாதி ஆணவக் கொலைகள் பெருகிவிட்டதைக் கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தது. சமூக வலைதளங்களிலும், தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
 
அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குற்றம்சாட்டின. ஒவ்வொரு அரசியல்வாதிகளின் ஆள்காட்டி விரல்களும், மற்றொன்றை சுட்டிக்காட்டிக்கொண்டு இருந்தன.
 
இது ஒருபுறம் நடந்துகொண்டு இருந்த அதே சமயம், மற்றொரு குரல் ஒன்று உயர்ந்தது. உத்தரகாண்ட் மாநில காவல்துறையின் ’சக்திமான்’ குதிரையின் காலை பாஜக எம்.எல்.ஏ. உடைத்த சம்பவத்தைக் கண்டித்து நடிகை த்ரிஷா வெளியிட்ட கண்டன செய்தியை பற்றியது.
 
அதாவது, ஒரு குதிரையின் கால் ஒடிக்கப்பட்டதற்கு குரல் கொடுத்த நடிகை த்ரிஷா, உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலையை கண்டித்து ஏன் தனது எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது.
 
என்னைப் பொறுத்தவரையில், சங்கரின் படுகொலையை, சாதி ஆணவப் படுகொலைகளை இதைவிட வேறெப்படியும் கேவலப்படுத்த முடியாது. ஒரு சம்பவம் தீவிரமான விஷயமாக விவாதித்துக் கொண்டிருக்கையில், ஒரு சாதாரண நடிகை குரல் கொடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதாக மாற்றப்படுவது எவ்வளவு கேவலமான விஷயம்.
 
ஸ்டாலின் சம்பவம் நடந்த 1 தினத்திற்கு பிறகு கண்டனம் தெரிவித்துள்ளார். அதுவும் பட்டும்படாமலும், தொட்டும் தொடாமலும் ஒரு அறிக்கை. அதைப் போலவே பல்வேறு கண்டனங்களுக்குப் பிறகு கருணாநிதி 2 நாட்களுக்குப் பிறகு அறிக்கை விடுத்தார். இவை அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டிய முதலமைச்சர் இதுவரை வாயே திறக்கவில்லை. அதனை வாய் திறந்து கேட்கவும் வேறு யாருக்கும் தைரியமில்லை.

ஏன் த்ரிஷாதான் கொடுக்க வேண்டுமா? வடிவேலு, கருணாஸ், நயன்தாரா, சந்தானம், சில்க் ஸ்மிதா, நமீதா எல்லாரும் குரல் கொடுக்க வேண்டும்தான். அவர்கள் நமது பணத்தில்தான் செழிப்பாக இருக்கிறார்கள் என்பது எல்லாம் சரிதான்.
 
மேலும் அடுத்தப் பக்கம்....

அப்படியென்றால், நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த நமது முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள், முக்கிய நமது பிரச்சனைகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய தீர்க்க வேண்டிய, தீர்த்திருக்க வேண்டிய அவர்கள் எல்லோரையும் குரல் கொடுக்க சொல்லி ஏன் கேட்க மறுக்கிறோம்? நமது போதாமையான அரசியல் அறிவின் காரணமாகவா?
 

 
தயாநிதிமாறன், செங்கோட்டையன், ப.சிதம்பரம், பொன்முடி, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரை முருகன், ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, ஐ.பெரியசாமி, தம்பிதுரை, சோ, சுப்பிரமணிய சாமி இவர்கள் எல்லாம் ஏன் குரல் எழுப்பவில்லை என்று கேட்டதுண்டா? நடிகைகள் பெயர்களை சொல்லி, அதை ஒரு அரசியல் பிரச்சனை இல்லை என்றுகூட அந்த விஷயம் முடைமாற்றம் செய்யப்படுவது என்பது வேதனையான விஷயம்.
 
அரசியல்வாதிகள் குரல் எழுப்ப மறுக்கும் காரணம், எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு. ஆதிக்க சாதியினரை கண்டித்தால் அந்த சமூகத்தின் வாக்குகள் விழாது என்பது அரசியல் முதலைகளுக்கு தெரியும். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு [இளைஞர்கள், பட்டதாரிகள் தவிர்த்து] இரட்டை இலை, உதயசூரியனை தவிர வேறெந்த அரசியல் அறிவையும் பெறவில்லை; யாரும் புகட்டவில்லை.
 
சாதியையும், சாதிய படுகொலைகளை ஒழிக்க வேண்டியதன் முழுப் பொறுப்பும், ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்களின் கையில்தானே உள்ளது. நாம் பிறந்த உடனேயே நாம் என்ன சாதியை சேர்ந்தவன் என்பதை அரசுகள்தான் முதலில் பதிவு செய்து கொள்கின்றன.
 
தமிழகத்தை ஆண்ட கட்சிகள் சாதியப் பிரச்சனைகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்துதான் உள்ளன. அவைகள் சாதிய உணர்வுகளை தூண்டி விடுகின்றன. கடந்த ஆட்சியில், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட, உயிர்போகும் அளவிற்கு தனது சக மாணவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பெயர் என்ன?

அதனை அப்போதைய காவல்துறை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கவில்லையா? இதற்கு அப்போதைய அரசு காரணமல்லவா? அப்படியென்றால், இன்றைக்கு கருணாநிதி அறிக்கை விடவில்லை ஏன் கேட்கவேண்டும்? அறிக்கை விட்டால்தான் கேட்க வேண்டும், அப்போதைக்கு என்ன செய்தீர்கள் என்று?
 
தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் ஜெயந்தி இவற்றிக்கு எல்லாம் அரசுகள் ஏன் அனுமதி வழங்குகின்றன. இந்த அரசுகள், அரசியல் கட்சிகளுக்கு சாதியப் பிரிவினை தேவையாக இருக்கிறது. அதன் மூலம் லாபக் கணக்குகள் அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது.
 
இந்த ஓராண்டுக்குள் ஆந்திராவில் செம்மரக்கடத்தல் பேரில் 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்டது, எழுத்தாளர் பெருமாள் முருகன், மதுவிலக்கு, சசி பெருமாள் மரணம், விஷ்ணுப்பிரியா, விஜயகாந்த் டெல்லி அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் காரி துப்பிய சம்பவம்.
 
சென்னை பெரு வெள்ளம், அதனை மறைக்க [மறக்க], சிம்பு பீப் பாடல். பிறகு அதிலிருந்து இளையராஜா பத்திரிக்கையாளரிடம் கடுமையாக நடந்து கொண்டது. கட்சத்தீவு பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, மீனவர்கள் கைது பிரச்சனை, அவ்வப்போது நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை என எத்தனையையோ பற்றி பேசி கடந்து சென்றுவிட்டோம்.
 
அதேபோல, இன்னும் சில நாட்களில் இதை விடுத்து வேறொன்றை பேச ஆரம்பித்து விடுவோம். அப்போது முற்றிலும் சாதிய பிரச்சனை மறக்கடிக்கப்பட்டுவிடும். அந்த சமயத்திலும், ஹன்சிகா ஏன் குரல் கொடுக்கவில்லை என இன்னொரு குரல் எழ வேண்டுமா?