வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. ஜல்லிக்கட்டு
Written By Murugan
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2017 (14:02 IST)

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ; மாலை வரை கெடு : மெரினாவில் பதட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களுக்கு இன்று மாலை வரை மட்டுமே போலீசார் கெடு விதித்துள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 

 
ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.    
 
இந்நிலையில், நேற்று காலை அதிகாலை முதல் சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வெளியேற மறுத்துவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.  சென்னையின் திருவல்லிக்கேனி, ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர்.  
 
போராட்டத்தின் முக்கிய களமாக திகழ்ந்த சென்னை மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லத்திற்கு எதிராக கூடியிருந்த லட்சக்கணக்கான போராட்டக்காரர்களில், பெரும்பாலானோர் போலீசாரின் கோரிக்கையை ஏற்று நேற்று அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர். 
 
ஆனால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் திருவல்லிக்கேனி, ஆயிரம் விளக்கு, பட்டினப்பாக்கம் பகுதி மக்கள் ஆகியோர் இன்னமும் மெரினா கடற்கரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
அவர்கள் நேற்று நள்ளிரவு சில செய்தியாளர்களிடம் கூறுகையில் “எங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அதற்காக நன்றி தெரிவிக்கின்றோம். ஆனால், இந்த அவசர சட்டத்தை அட்டவணை 9ல் சேர்த்தால்தான், மீண்டும் யாரும் வழக்கு தொடர முடியாது என நீதிபதி அரிபரந்தாமன் நேற்று கூறினார். எனவே, அவசர சட்டத்தை அட்டவணை 9ல் சேர்ப்பேன் என முதலமைச்சர் ஓ.பி.எஸ் கூற வேண்டும். 
 
அதேபோல், கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் விடுதலை செய்ய வேண்டும். போலீசார் தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். போராட்டகளத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு அரசு தகுந்த நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இது அனைத்தும் நடந்தால், அடுத்த 5 நிமிடத்தில், போரட்டத்தை கைவிட்டு இங்கிருந்து எல்லோரும் கிளம்பிச் செல்ல தயாராக இருக்கின்றோம்” என அவர்கள் கூறினர்.
 
தண்ணீர், உணவு, மருத்துவ வசதி என எதுவுமில்லாமல் அவர்கள் அங்கே போராடி வருகிறார்கள். அவர்களின் மீது மீடியா வெளிச்சம் பட்டுவிடக்கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. மேலும், இன்று மாலை வரை மட்டுமே போலீசார் அவர்களுக்கு கெடு விதித்துள்ளனர். அதன் பின்னும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை எனில், அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றுவார்கள் எனத் தெரிகிறது. இதை உணர்த்தும் விதமாக ஏராளமான போலீசார் அங்கு குவிந்துள்ளனர். 
 
இது தெரிந்தும், தங்கள் கொள்கையில் உறுதியோடு அங்கே ஆயிரக்கணக்கானோர் இன்னமும் அமைதியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

பதட்டத்தில் இருக்கிறது மெரினா....