செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. கார்கில் போர் சாதனைகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (11:00 IST)

நாட்டுக்காக உயிர்நீத்த இந்த தமிழரை தெரியுமா? கார்கில் போர் நினைவு நாள்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே வரலாற்று முக்கியத்துவம் பெற்றதான கார்கில் போர் முடிந்து 21 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும் அதன் தாக்கங்கள் இந்தியாவில் இன்றும் குறையாமல் உள்ளது.

பாகிஸ்தான் – இந்தியா இடையேயான எல்லைப்பிரச்சினை 1947ல் நாடுகள் பிரிக்கப்பட்டபோதிலிருந்தே தொடர்ந்து வருகின்றன. எனினும் 1971ல் நடந்த இந்திய – பாகிஸ்தான் போர் சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்தபோது எல்லைகள் குறித்த சில முடிவுகள் எடுக்கப்பட்டன. 1974 முதல் லடாக்கின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியான கார்கில் இந்தியாவிற்கு சொந்தமானதாகவே இருந்து வந்தது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீந்கரில் இருந்து லே பள்ளத்தாக்கு வழியாக கார்கிலை இந்தியாவோடு இணைக்கிறது.

இந்நிலையில் 1999ம் ஆண்டு மே 3ம் தேதியில் பாகிஸ்தான் துருப்புகள் கார்கிலில் அத்துமீறி நுழைகின்றன. மேலும் 5 இந்திய வீரர்களை பிடித்த பாகிஸ்தான் ராணுவம் அவர்களை கொடுமைப்படுத்தி கொன்றது இந்தியா பெரும் கோபம் கொள்ள வழிவகை செய்தது. மே 10ம் தேதிக்குள்ளாக பாகிஸ்தான் ராணுவம் கஸ்கர், ட்ராஸ் உள்ளிட்ட பகுதிகளை பிடித்துக் கொள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையே “கார்கில் போர்” மூண்டது. இந்நிலையில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பை தடுக்க அனுப்பப்பட்ட பீகார் ரெஜிமெண்டை சேர்ந்தவர்தான் மேஜர் சரவணன்.

மேஜர் சரவணன் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில் பிறந்தவர். 1995 ல இந்திய ராணுவத்தில் சேர்ந்த அவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் கழித்திருந்த நிலையில் கார்கில் போர் மூண்டது. மே 28ல் மேஜர் சரவணனின் படைக்குழு லடாக்கின் பட்டாலிக் பகுதியில் இருந்த போது நள்ளிரவி பாகிஸ்தான் படைகள் மேஜர் சரவணின் ராணுவ குழுவை தாக்க தொடங்கின. 33 ராணுவ வீரர்கள் 4 உயர் அதிகாரிகளை மட்டுமே கொண்ட சிறிய ராணுவ குழு அது. என்றாலும் உயிரை பொருட்படுத்தாமல் மேஜர் சரவணனும் அவரது குழுவினரும் மிகக்கடுமையாக போராடி பாகிஸ்தான் ராணுவத்தினர் பலரை பலி கொண்டு உயிர் மாய்ந்தனர். “செய் அல்லது செத்துமடி” என்ற கொள்கையோடு நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த மேஜர் சரவணன் “பட்டாலிக்கின் நாயகன்” என்றழைக்கப்படுகிறார்.

இரண்டு மாதங்கள், மூன்று வாரங்கள், இரண்டு நாட்கள் தொடர்ந்த கார்கில் போர் ஜூலை 26, 1999ல் இந்தியாவின் வெற்றியால் முடிவடைந்தது. கார்கில் யுத்தத்தில் இறந்த பலருக்கு பரம்வீர் சக்ரா, அசோக சக்ரா போன்ற உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. மேஜர் சரவணன் ராணுவத்தின் மிக சிறிய அளவிலான பொருப்பில் இருந்ததாலும், நான்கு ஆண்டுகளே ரானுவத்தில் கழித்திருந்ததாலும் அவருக்கு இந்திய அரசின் “வீர்” பதக்கம் வழங்கப்பட்டது.

எனினும் அவரது தியாகத்தை நினைவுக்கூறும் விதமாக தமிழக அரசு வரது பெயரில் திருச்சியில் நினைவு பீடம் அமைத்துள்ளது. 2000ம் ஆண்டின் பாடத்திட்டத்தில் மேஜர் சரவணின் வாழ்க்கை குறித்த பாடத்தையும் இடம்பெற செய்தது குறிப்பிடத்தக்கது.

கார்கில் யுத்தம் முடிந்த 21வது ஆண்டு நினைவு தினம் ஜூலை 26ல் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களை நினைவு கூர்வோம்.