புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (09:25 IST)

சகல காரியங்களும் சித்தியாகும் கணபதிகள் பற்றி அறிவோம்...!!

சகல காரியங்களும் சித்தியாகும் கணபதிகள் பற்றி அறிவோம்...!!
வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.
 
சக்தி கணபதி: பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
 
லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.
 
பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.
 
மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.
சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்கும் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பென் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.
 
உச்சிஷ்ட கணபதி: வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.