வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (10:56 IST)

ஆடித்தபசு விழா கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம் என்ன தெரியுமா...?

Aadi Thabasu
சைவமும் வைஷ்ணவமும் கைகோர்த்துக் காட்சி தரும் திருத்தலம் சங்கரன் கோவில். இங்கே சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் இணைந்து, ஒரே உடலெனக் கொண்டு காட்சி தருகின்றனர். சிவனாரும் பார்வதியும் அர்த்தநாரீஸ்வரராக எப்படிக் காட்சி தருகிறார்களோ அதேபோல், சிவனாரும் பெருமாளும், ஹரியும் ஹரனுமாகக் காட்சி தரும் ஒப்பற்ற திருத்தலம்.


இந்தக் காட்சியை தரிசிக்க வேண்டி, கடும் தவம் புரிந்தாள் உமையவள். ஊசி முனையில் ஒற்றைக்காலில் நின்றபடி கடும் தவம் இருந்தாள். அவளின் தபஸ் செய்யும் காட்சியே சங்கரன் கோவிலின் இன்னொரு அற்புதமானது. இந்தத் தலத்தில், தவக்கோலத்தில் கோமதியம்மன் காட்சி தருகிறாள். அவளின் தவத்துக்கு இணங்கி, சங்கரநாராயணர் கோலத்தைக் காட்டினர் என்கிறது ஸ்தல புராணம். மேலும் மகா யோகினி சக்தி பீடம் எனப் போற்றுகிறது புராணம்.

கோமதியன்னையின் கருணையும் கடாக்ஷமும் சொல்லில் அடக்கமுடியாதது. அதனால்தான் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில், பெண் குழந்தை பிறந்தால், கோமதி என்றே பெயர் சூட்டினார்கள். இன்றைக்கும் அந்த வழக்கம் இருந்து வருகிறது.

தவம் புரிந்த கோமதியன்னைக்கு, ஆடி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், உத்திராட நட்சத்திர நாளில்தான் சிவனாரும் பெருமாளும் சங்கரநாராயணராகக் காட்சி தந்தருளினர். அதனால்தான் ஒவ்வொரு ஆடி பெளர்ணமிக்கு முன்னதாக, ஆடித்தபசு விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சங்கரன்கோவிலில் பத்து நாள் விழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.