விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!
ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று "விநாயக சதுர்த்தி' பூஜை கொண்டாடப்படுகிறது. பூஜை வழிபாடுகளில் மிக எளிமையானது விநாயகர் வழிபாடாகும்.
பொதுவாக எந்த நல்ல காரியங்களை ஆரம்பிப்பதென்றாலும் அவை தடைகள் இன்றி நடைபெறுவதற்கு மஞ்சளினால் செய்த பிள்ளையாரை பூஜை செய்து வழிபாட்டுடன் துவக்குவது வழக்கம்.
விநாயக சதுர்த்தியன்று களி மண்ணினால் செய்த விநாயகர் திருவுருவத்தை வீட்டில் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். உலக சிருஷ்டியின் ஆதியில் தோன்றிய வஸ்துக்களில் பிருதிவி எனப்படும் மண்ணும், கடலும் முக்கியமானவை. விநாயகரே ஆதிதேவராக இருப்பதால் இவரை களிமண்ணால் உருவாக்கி விநாயக சதுர்த்தியன்று பூஜிக்கின்றோம். புனர்பூஜை கழித்து திரும்பவும் அந்த பிம்பத்தை கடல்நீரில் கரைத்து விடுகின்றோம்.
விநாயகர் பூஜையில் அவசியம் இடம் பெறவேண்டியவை: அணிவிப்பதற்கு: எருக்கம் பூக்களால் ஆன மாலை, அர்ச்சிப்பதற்கு: அருகம் புற்கள், நிவேதனத்திற்கு: மோதகம் என்று சொல்லப்படும் அரிசிமாவினால் ஆன கொழுக்கட்டை.
வழிபாட்டில் பின்பற்ற வேண்டியவை: நெற்றிப்பொட்டில் கைகளால் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போடுதலும் நன்று. வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுளான விநாயகப் பெருமானை நம்பிக்கையுடன் வழிபட்டால் கற்பகத் தருவாக இருந்து வாழ்வில் நாம் நலம் பெற வேண்டியவைகள் அனைத்தையும் அருளுவார்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகரும், கணங்களுக்கெல்லாம் அதிபதியும், விக்னங்கள் யாவற்றையும் நீக்கி பக்தர்கள் வேண்டும் வரங்களை வாரி வழங்கும் வள்ளலுமாகிய விநாயக பெருமானை விநாயகர் சதுர்த்தி அன்று நோன்பிருந்து வணங்கி பேரருள் பெறுவோம்.