1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (17:43 IST)

கருட பகவான் பற்றி சில அரிய தகவல்களை நாம் தெரிந்துக்கொள்வோம் !!

பாற்கடலை கடையும்போது கிடைக்கும் அமுதத்தை தமக்கு கொண்டு வந்து தந்தால் கருடனின் தாயை தங்கள் அன்னையிடம் இருந்து மீட்டுத் தருவதாக பாம்புகள் வாக்களித்தன.


பலவகையான போராட்டங்களுக்கு பிறகு மிக பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த அமிர்த கலசத்தை கருடன் தூக்கிச் செல்ல தன தாயின் மேல் அவன் வைத்திருந்த பிரியத்தை எண்ணி மனம் மகிழ்ந்த நாராயணன் அவனை தனது வாகனமாகிக் கொண்டார்.

விஷ்ணுவை தன மீது அமர்த்திக் கொண்டு வெகு வேகமாக கருடன் பறந்த போது இந்திரன் தன் வஜ்ராயுதத்தை ஏவி அவனைத் தடுக்கப் பார்த்தான். ஆனால் வஜ்ராயுதம் கருடனுக்கு எந்த தீங்கும் இழைக்கவில்லை.

கருடனின் சக்தி அறிந்த இந்திரன் அமிர்தத்தை வேறு எவருக்கும் தரக்கூடாது என்று கட்டளை இட்டான். அதற்கு கருடன் "என் தாய் விடுதலை ஆனதும் தாங்களே வந்து அமிர்த கலசத்தை மீட்டுக் கொள்ளுங்கள். பதிலுக்கு பாம்புகள் எனக்கு உணவாகும் வரத்தை நீங்கள் அருள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தது.

இந்திரனும் கருடனின் சொல்லால் மனம் நெகிழ பாம்புகள் இருக்கும் இடத்தில் அமிர்த கலசத்தை ஒரு புல் தரையின் மீது கருடன் வைத்தான். ஆகம முறைப்படி சுத்த பத்தமாக ஸ்நானம் செய்த பிறகே அமிர்தத்தை பருக வேண்டும். அதற்கு முன்பு தன் தாயை விடுவிக்க வேண்டும் என்று கருடன் சொல்ல வினதாவும் விடுதலை ஆனாள். பாம்புகளும் ஸ்நானம் செய்யச் சென்றன.

அந்நேரம் இந்திரன் வந்து அமிர்த கலசத்தை மீண்டும் எடுத்துச் சென்றான். அமிர்த கலசத்தை காணாத பாம்புகள் ஏமாற்றத்தில் திகைத்தன. அதுமுதல் கருடன் பாம்புகளை உணவாக்கிக்கொள்ள ஆரம்பித்தது.

பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்' என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது.