அண்ணாமலையார் கோவில் நந்திக்கு ஏராளமான இனிப்பு, பழங்களால் அலங்காரம்!
இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நந்திக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்றது.
தை முதல் நாள் விவசாயத்தை காக்கும் சூரியனை வழிபடும் வகையில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் விவசாயத்திற்கு உற்ற நண்பனாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்து மத வழக்கத்தில் பசு ஒரு புனிதமான விலங்காக உள்ளது. சிவபெருமான் கோவில்களில் சதாசர்வமும் அவரை பார்த்து வணங்கியபடி இருக்கும் நந்தியை இந்த மாட்டுப் பொங்கலில் மக்கள் வணங்கி சிறப்பித்து வருகின்றனர்.
அவ்வாறாக பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு இன்று மாட்டுப் பொங்கலில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் ஏராளமான பூக்கள், பழங்கள், இனிப்புகள், வடகம், வடை, காய்கறிகளை கொண்டு நந்தியை முழுவதுமாக சிறப்பு அலங்காரம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் இருந்த நந்தியை வணங்கி வேண்டி சென்றனர்.
Edit by Prasanth.K