நாளை திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலம்.. குவியும் பக்தர்கள்..!
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரும் நிலையில் ஆண்டு இரண்டு முறை மட்டும் அண்ணாமலையாரே கிரிவலம் வருவார்
ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் தினம் மற்றும் கார்த்திகை மாதம் தீபத்திருநாளின் மறுநாளும் அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். தை மாதம் மாட்டுப் பொங்கல் தினத்தன்று திருவூடலின் போது பிருங்கி மகரிஷிக்கு மட்டும் தனியாக அண்ணாமலையார் காட்சியளித்ததால் கோபம் கொண்ட உண்ணாமலை அம்மன் ஊடல் கொண்டு தனியாக சென்று விடுவார். அதன் பிறகு அண்ணாமலையார் மட்டும் தனியாக பிருங்கி மகரிஷிக்கு காட்சியளித்து கிரிவலம் வருவார் என்பது ஐதீகம்.
அதேபோல் கார்த்திகை திருவிழா முடிந்த அடுத்த நாள் கிரிவலம் மகிமையை பக்தர்களுக்கு உணர்த்தும் விதமாக அண்ணாமலையார் குடும்பத்துடன் கிரிவலம் வருவார்.
அந்த வகையில் நாளை அண்ணாமலையார் கிரிவலம் நடைபெற உள்ளதை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அண்ணாமலையார் கிரிவலம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தான அதிகாரிகள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran