பாரத தேசம் பக்தி நிரம்பியது. பல முனிவர்களும் மகான்களும் இங்கு தோன்றி பக்தி வளர்வதற்காகத் தொண்டாற்றி உள்ளனர். இறைவனை அவரவர்களுக்குத் தோன்றிய வகையில் உருவகப்படுத்தி, பக்தி பூர்வமான பாடல்களை இயற்றி சதா சர்வ காலமும் அவற்றைப் பாடிப் பரவசமடைந்திருக்கிறார்கள்.
கண்ணன் அவர்கள் கற்பனையில் எந்தெந்தக் கோலத்தில் காட்சியளித்திருக்கிறான் என்பதை ஆராயும் போது, அந்த மாயாஜால கண்ணன் நம்மை எங்கேயெல்லாமோ கொண்டு போய் விடுகிறான்!
webdunia photo
WD
அவ்வாறு நமது கருத்தில் வியாபித்துள்ள எட்டு பக்திமான்கள் கண்ணனைக் கண்ட விதத்தையே பின் வரும் சித்திர அனுபந்தத்தில் நாம் காண்கிறோம்.
வியாஸர்
மகாபாரதம் வகுத்த வியாசமுனி கிருஷ்ணனை ஞானசாரியனாகவே பாவிக்கிறார். யுத்த களத்தில் அர்ஜுனன், சோர்வெய்தி, வாழ்க்கையிலேயே வெறுப்புற்றுக் கையிலுள்ள காண்டீபத்தைக் கீழே எறியும் போது, அவனுக்கு நண்பனாகத் தேரோட்ட வந்த கண்ணன் (பார்த்தசாரதி) அரிய தத்துவங்களை எடுத்துரைத்து, போர் புரிய அவனை ஊக்குவிக்கிறார்.
லீலாசுகர்
பூர்வாசிரமத்தில் இவரது பெயர் பில்வமங்கலன். மிகுந்த சபல புத்தி இவருக்கு. சிந்தாமணி என்ற தாசிமேல் காமுற்று, மையிருளையும் பாராது, காட்டாற்று வெள்ளத்தையும் சிரமப்பட்டுக் கடந்து தாசி வீட்டினுள் சென்றார். தாசியோ தான் தினமும் பூஜித்து வரும் கிருஷ்ண விக்ரகத்தைச் சுட்டிக் காட்டி “இந்நாள் வரை என்னிடம் கொண்ட ஆசையை, இந்தக் கிருஷ்ணன் மேல் வைத்திருந்தீரானால் உமது ஜன்மம் கடைத்தேறியிருக்குமே!” என்று அங்கலாய்க்க, அக்கணத்திலேயே அவர் மனமும் வாழ்க்கையும் வேறு திருப்பம் காண்கின்றன. சிந்தாமணியையே முதற்குருவாக ஏற்று தாம் இயற்றிய பக்திப் பாடல்களில் அவளுடைய பெயரையே முதலில் வைத்துப் பாடுகிறார்!
ஜயதேவர்
பக்திமானான ஜயதேவர் கண்ணன் மேல் அஷ்டபதி பாடுகிறார். பாடல்களை வெகு சுவாரசியமாக அனுபவித்து அப்படியே ஏட்டில் வரைந்து கொண்டே வர, ஓரிடத்தில் பாடல் தடைப்பட்டு விடுகிறது. மேற்கொண்டு எழுத எத்தனையோ முயன்றும், மனம் அவரைவிட்டு விலகி அப்பால் சென்றுவிட்டதைப் போல் உணர்ச்சி ஏற்பட்டது. உடனே அவர் ஸ்நானத்திற்கு எழுந்து சென்றார். ஸ்நானம் செய்து விட்டு மீண்டும் தன் பாடலை விட்ட இடத்தில் தொடர அமர்ந்த போது, ஏட்டில் அந்த இடம் பூர்த்தி செய்யப் பட்டிருப்பதைக் கண்ணுற்றார். அந்த உற்சாகத்தில் தம்மை மறந்து அதியற்புதமான அஷ்டபதியைப் பாடி அருளினார்.
பெரியாழ்வார், கண்ணனைத் தமது குழந்தையாகவே பாவித்துப் பாடியிருக்கிறார். தம்மை யசோதைப் பிராட்டியாக கற்பனை செய்து கொண்டு பக்திப் பெருக்கில் யசோதையாகவே ஆகிவிட்டார். பாலகனாகிய கண்ணனை அவர் நீராட அழைக்கிறார்.
ஆண்டாள்
தந்தை இவ்வண்ண மிருக்க, அவர் பெண்ணாகிய கோதையோ, கண்ணனைத் தன் மணாளனாகவே வரித்துக் கொள்ளுகிறாள். கண்ணன் மீதுற்ற காதலிலே அவள் திளைத்துத் திளைத்து ஏங்கி ஒரு நாள் கண்ணனுக்கும் தனக்கும் நடக்கும் திருமணத்தையே கனவாகக் கண்டு கண்ணனுக்கு மாலையிடுகிறாள். ஆண்டாளுக்கு சூடிக் கொடுத்த சுடர்கொடி என்ற பெயரும் உண்டு.
புரந்தாதாசர்
‘புரந்தரவிடல’ என்று முத்திரைவைத்த பதங்களை யாராவது பாடக் கேட்டால் இது புரந்தரதாசர் பதம் என்று ஐயமின்றி சொல்லிவிடுவார்கள். பெரிய கௌரவமான மாத்வ பரம்பரையில் பிறந்தவர். எத்தனைக்கு எத்தனை பொருள் நிரம்பியிருந்ததோ அத்தனைக்கு இவரிடம் மருள் வந்து புகுந்து கொண்டது. ஈயாத உலோபி. இவருக்கு நேர் எதிர் இவரது சகதர்மிணி. அவள் மூலமாகத்தான் பகவான் இவரை ஆட்கொள்ளுகிறார். இவரது மனம் பரிபக்குவ நிலையை அடைய பகவானிடம் பல சோதனைகளுக்கும் ஆளாகிறார். பண்டரிபுர பாண்டுரங்க விடலன் பேரில் அளவற்ற பக்தி இவருக்கு. லட்சத்துக்கு மேற்பட்ட பதங்களை இயற்றியிருக்குறார்.
பாரதி
webdunia photo
WD
நம்மிடையே வளர்ந்து, நமக்கு நன்கு பரிச்சயமானவர் கவி சுப்ரமண்ய பாரதி. ஸ்ரீ கண்ணனைப் பலவிதங்களில், காதலியாகவும், குருவாகவும், சீடனாகவும், ஏன், சேவகனாகவுமே கற்பனைக் கண் கொண்டு பார்த்துத் தம்மை மறந்து லயித்திருக்கிறார். இவரது கவிதைக் கோவையில் நவரசங்களும் ததும்புகின்றன. தேன் மதுரத் தமிழிலே கண்ணனைக் காதலனாக மனத்தில் வைத்து, காதலியாகத் தன்னை வரித்துக் கொண்டு கவி பாரதியார் இயற்றியுள்ள பாடல்கள் தெவிட்டாத அமிர்தமாகத் தமிழ் உள்ளளவும் இருந்து வரும்.