1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

உடலில் வறட்சி நீங்கி அழகாக்கும் ஆவாரம் பூ

ஆவாரம் பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர மேனி எழில் பெறுவதுடன் உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். அதன்  காரணமாகவே ஆவாரை பூத்திருக்க... சாவாரை கண்டதுண்டோ என்ற பழமொழியும் ஏற்பட்டது. பூ, இலை, பட்டை, வேர் என மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் ஆவாரம் பூவின் சில அழகுக் குறிப்புகளை இங்கு பார்ப்போம்.

 
பனிக்காலங்களில் உடலில் ஏற்படும் வறட்சியை போக்க, ஆவாரம் பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் சேர்த்து உடலில் தேய்த்து உலர்ந்த பின் கடலைமாவைக் கொண்டு கழுவி வர உடலில் வறட்சி நீங்கி மென்மையாகவும், பளிச்சென்றும்  இருக்கும்.
 
முகத்தில் சில பெண்களுக்கு மீசை போன்று முடி இருக்கும். இதை போக்க, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, பூலான்  கிழங்கு இம்மூன்றையும் சம அலவு எடுத்து கொண்டு தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்தில் தேவையில்லாத  முடி உதிர்ந்துவிடும்.
 
முடிக் கொட்டுவதைத் தடுக்க ஆவாரம் பூ செம்பருத்தி, தேங்காய்ப் பால் சம அளவு எடுத்து அரைத்து வாரம் ஒரு தடவை  தலைக்குத் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது உடனே நிற்கும். கூந்தலும் நன்கு வளரும்.
 
சிறிது ஆவாரம் பூவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து. வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தலைகுளிக்கும்போது கடைசியாக வடிக்கட்டி வைத்துள்ள ஆவாரம் பூவின் தண்ணீரைக் கொண்டு முடியை அலச பளபளவென்றிருக்கும். இதனால்  உடல் நிறமும் கூடுவதுடன் புத்துணர்வாகவும் இருக்கும்.
 
ஆவாரம் பூவுடன் சிறு வெங்காயம், பருப்பு சேர்த்து கூட்டு செய்து வாரம் ஒரு முறை உண்டு வர உடல் தேஜஸ் பெறும்.
 
ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை அரைத்து சாறெடுத்து, அதன் நீர் பதம் போக சுண்ட காய்ச்சி அத்துடன் தேங்காய்  எண்ணெய் கலந்து தினமும் தடவி வர தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து முடி நன்கு வளர தொடங்கும். முடி  கொட்டுவதும் நிற்கும்.