காதுகளில் எறும்பு, பூச்சி புகுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
காதுக்குள் எறும்பு அல்லது பூச்சிகள் புகுந்துவிட்டால் பெரும் தொந்தரவாக இருந்தாலும், அதைவிட இது ஒரு வகையான அச்சத்தையும் ஏற்படுத்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
காதுக்குள் பூச்சி புகுந்தால் முதலில் ஒரு இருட்டறைக்குள் சென்று மொபைல் லைட் அல்லது டார்ச் பயன்படுத்தி வெளிச்சம் காட்ட வேண்டும். பொதுவாக, பல பூச்சிகள் ஒளியை கண்டவுடன் தாமாகவே வெளியே வந்துவிடும்.
காதுக்குள் எறும்பு புகுந்துவிட்டால், வீட்டில் இருக்கும் ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயிலை இரண்டு, மூன்று துளிகள்காதுக்குள் விடலாம். எண்ணெயின் காரணமாக பூச்சிகள் உள்ளே நீண்ட நேரம் இருக்க முடியாமல் வெளியே வந்துவிடும்.
மற்றொரு எளிய முறையாக, மிதமான சூட்டில் உள்ள நீரில் சிறிது உப்பு கலந்து காதுக்குள் சில துளிகள் விடலாம். உப்பு கலந்த நீர் பூச்சிகளுக்கு பிடிக்காததால், அவை விரைவில் வெளியேறிவிடும்.
கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
காதில் பூச்சி புகுந்தவுடன் காதி ஸ்டிக் அல்லது வேறு கூர்மையான பொருட்களை பயன்படுத்தி அகற்ற முயற்சிக்கக்கூடாது. இது பூச்சியை மேலும் உள்ளே செல்லச் செய்யலாம், மேலும், காது ஜவ்வு (eardrum) சேதமடையக்கூடும்.
விரலால் அல்லது வேறு பொருட்களால் அகற்ற முயற்சிக்காதீர்கள். இது வலி ஏற்படுத்தும் மற்றும் காது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தண்ணீர் அல்லது எண்ணெய் ஊற்றியும், பூச்சி வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
Edited by Mahendran