சாய் பல்லவி இயக்குனர் ஆனதும் எனக்கொரு வேடம் கொடுப்பதாக சொல்லியுள்ளார்- பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த சாய் பல்லவி, 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றி அவரை தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமானார். அதையடுத்து தமிழில் தியா, என் ஜி கே, கார்கி மற்றும் மாரி 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டுமே நடித்தார்.
இந்நிலையில் அவர் கடந்த காலங்களில் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய பட்ங்களில் நடிக்க மறுத்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படங்களின் கதை அவருக்கு சென்ற போது, அதில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று சொல்லி அவர் நிராகரித்து விட்டார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. அதே போல கிளாமர் வேடங்களில் நடிக்க மறுத்ததாலும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் சாய்பல்லவி விரைவில் இயக்குனர் ஆகவுள்ளதாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள தண்டேல் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சைதன்யா “சாய்பல்லவி விரைவில் இயக்குனர் ஆனதும் என்னை அவர் படத்தில் நடிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.