புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. வாய்ப்புகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (09:44 IST)

அஞ்சல் துறையில் தமிழர்களுக்கு 3,167 பணியிடங்கள்! – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

indian post
இந்திய அஞ்சல்துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தளத்தில் குழப்பம் நிலவியதால் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் 40,000 கிராமின் டாக் சேவக் காலியிடங்களுக்கு பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்கிறது. இதில் தமிழ்நாட்டில் 3,167 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்கும் தளத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.

மதிப்பெண் பூர்த்தி செய்யும் பகுதியில் 6 பாடங்களுக்கான இடம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 10ம் வகுப்பிற்கு 5 பாடங்கள் மட்டுமே உண்டு. 6வது பாடத்தை நிரப்பாவிட்டால் விண்ணப்பிக்க முடியாது என்ற சூழல் உள்ளது. இந்த சிக்கலை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அஞ்சல்துறை செயலர் உள்ளிட்ட பலருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “விண்ணப்பத்தில் இருந்த தடை நீங்கியது தமிழ்நாட்டு மாணவர்கள் அஞ்சலக GDS பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதில் இருந்த சிக்கல் தீர்ந்தது. அதற்குரிய மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டதாக அஞ்சல் துணை இயக்குநர் ராசி செய்தி அனுப்பி உள்ளார். 3நாள் கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுவிட்டது. மகிழ்ச்சி.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதான விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16.02.2023 என்றும், விண்ணப்பங்களை சரிபார்ப்பதற்கான கடைசி தேதி 19.02.2023 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தேதிகள் மூன்று நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை ஜிடிஎஸ் பணியிடத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் மேலதிக தகவல்களுக்கு https://indiapostgdsonline.gov.in/ என்ற தளத்தில் பார்க்கவும்.