கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் துவக்கமாக அனைத்து தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் இல்லங்களின் வாசல்களிலும் நட்சத்திரம் தொங்கவிடப்படும்.
கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ம் தேதி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களும், அவரைப் பின்பற்றுவோரும் இயேசுவின் பிறப்பை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர்.
இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தின் அடையாளமாகத்தான் தங்கள் வீடுகளில் பெரிய நட்சத்திரங்களை அலங்காரமாக தொங்க விடுகின்றனர்.
டிசம்பர் மாதம் பிறந்த உடனேயே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான ஒரு அழைப்பு மணியாக அனைத்து கிறிஸ்துவர்களின் இல்லங்களிலும் இந்த நட்சத்திரத்தை மின் விளக்கு அலங்காரத்துடன் தொங்க விட்டு, தங்கள் வீடுகளிலும் இயேசு பிறந்திருக்கிறார் என்று அறிவித்து மகிழ்கின்றனர் என்பதை நாம் காணலாம்.
பரிசுகளோடு வரும் கிறிஸ்மஸ் தாத்தா!
கிறிஸ்மஸ் நாட்களுக்கு முன்னதாகவே கிறிஸ்மஸ் தாத்தாவின் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒவ்வொரு கிறிஸ்துவ வீடுகளுக்கும் கிறிஸ்மஸ் தாத்தா சென்று இயேசு கிறிஸ்துவின் துதிபாடலை பாடி மகிழ்ந்து உற்சாகமாக ஆடுவார்கள்.
ஒவ்வொரு வீடுகளிலும் கிறிஸ்மஸ் தாத்தாவின் வரவை பெரியவர்களும், சிறுவர்களும் ஆனந்தமாக எதிர்நோக்கி இருப்பார்கள்.
கிறிஸ்மஸ் தாத்தா வந்தவுடன் இயேசு பாலன் பிறந்தார் என்ற புதுப்பாடல் பாடப்பட்டு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்படும். அப்போது இயேசு பாலனின் பிறப்பு பற்றிய நற்செய்தியை அனைவரும் மகிழ்ச்சிகரமாக கூறப்படும்.
இதில் அநேக விசுவாசிகள் கலந்து கொண்டு இரவு நேரங்களில் இயேசுவின் பிறப்பு நாளான கிறிஸ்மஸ் பண்டிகை பற்றி கூறப்படும்.
அப்போது பெரியவர்கள், இளைஞர்கள், சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டு கிறிஸ்துவின் பிறப்பை பற்றி உற்சாகமாக அனைவரிடத்திலும் சென்று கூறுவார்கள்.
இப்போதெல்லாம் பல பகுதிகளிலும் டிசம்பர் மாதம் துவங்கியதில் இருந்தே பெரிய பெரிய வணிக நிறுவனங்களின் வாயில்களில் கிறிஸ்மஸ் தாத்தா நின்று கொண்டு கடைக்கு வரும் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை அளிப்பதையும், பெரியவர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துக்கள் கூறுவதையும் காணலாம்.
இயேசு பிறப்பை நினைவூட்டும் கிறிஸ்மஸ் மரம்!
கிறிஸ்மஸ் பண்டிகை துவங்குவதற்கு முன்பே கோயில், வீடுகளில் கிறிஸ்தவர்கள் இயேசு பிறந்ததை ஞாபகப்படுத்தும் வகையில் மாட்டுத் தொழுகை போல் அமைத்து அதில் மரங்கள் செயற்கையாக வைத்து ஆடுகள், மேய்ப்பர்கள் போல் சித்தரித்து வைக்கப்படும்.
பின்னர் அதனை சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அந்த இடமே பகல் போல் காட்சி அளிக்கும். காலை மாலை இரு வேளைகளும் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபம் செய்து இறைவனை புகழ்வார்கள்.
இயேசு பிறக்கும் போது வானத்தில் இருந்து நட்சத்திரம் தோன்றியதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வீடுகளிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திரங்கள் தொடங்கவிடப்பட்டிருக்கும்.
கிறிஸ்மஸ் அன்று கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து அதிகாலை 5 மணிக்கே கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து இயேசுவின் புகழ்பாடுவார்கள். அப்போது ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்வார்கள். பின்னர் தங்கள் வீடுகளில் செய்யப்பட்ட பண்டங்களை கொடுக்கும் போது 'கேப்பி கிறிஸ்மஸ்' என்று இயேசுவை புகழ்ந்துரைப்பார்கள்.