செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 20 ஜூலை 2020 (13:45 IST)

பொலிவியா பாலியல் தொழிலாளர்கள் 'ரெயின்கோட்'களை பயன்படுத்துவது ஏன்?

கொரோனா காரணமாக வேலையிழந்த பொலிவியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள், தங்களையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கையுறை, பிளீச் மற்றும் ரெயின்கோட்களை பயன்படுத்த உள்ளதாக கூறுகின்றனர்.

கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, பொலிவியாவின் இரவு தொழிலாளர்கள் அமைப்பு இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
 
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக நடந்து வருகிறது. உரிமம் பெற்ற விபச்சார விடுதிகளும் அங்கு இயங்கி வருகின்றன.
 
கொரோனா தொற்று காரணமாக அந்நாட்டில் மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு தற்போது சற்று தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், பாலியல் தொழில் உள்ளிட்ட சில தொழில்களுக்குப் இன்னும் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
 
தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வரும் வனிசா, தற்போது வேலை இல்லாததால் தனது குழந்தைகளின் படிப்பு செலவுக்குக் கூட பணம் இல்லை  என்கிறார்.
 
"இந்த நடவடிக்கைகள் எங்களின் பாதுகாப்புக்கும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கும் முக்கியம். இந்த பாதுகாப்பு நடைமுறைகளை எங்களது வாடிக்கையாளர்கள்  ஏற்றுக்கொள்வார்கள்" என்கிறார் அவர்.
 
தனது பாதுகாப்பிற்காக முக கவசம், கையுறை மற்றும் ரெயின்கோட்களை பயன்படுத்தப் போவதாக அண்டோனிடா என்ற பெண் கூறுகிறார்.
 
விபச்சார விடுதிகளில் தான் பிடித்து நடனமாடும் கம்பியில், கிருமி நாசினியைத் தெளித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
 
பொலிவியாவின் இரவு தொழிலாளர்கள் அமைப்பு கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சகத்தைச் சந்தித்து, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை எவ்வாறு  பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதற்கான 30 பக்க வழிகாட்டுதல்களை சமர்ப்பித்தது.
 
பொலிவியாவில் இதுவரை ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,898 பேர் இறந்துள்ளனர். கடந்த வாரம் அந்நாட்டின்  இடைக்கால அதிபர் ஜீனைன் அனெஸ் சாவேஸ், தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ட்வீட் செய்திருந்தார்.

தென் அமெரிக்காவின் ஏழ்மையான நாடான பொலிவியாவில், போதிய அளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை என்ற கவலையும் உள்ளது.
 
பொலிவியாவின் பாலியல் தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதியான லில்லி கோர்டெஸ்,`` இது அனைவருக்கும் கடுமையான காலம். ஆனால், நாட்டில்  போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை பெரும் ஆபத்தில் நிறுத்தியுள்ளது`` என்கிறார்.
 
"நாங்களும் பொலிவியா சமூகத்தின் ஒரு அங்கமே. நாங்கள் பாலியல் தொழிலாளர்கள், பெண்கள், தாய்மார்கள், பாட்டிகள். தற்போது வேலை நேரம் தொடர்பாகப்  போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், நாங்கள் தெருவில் தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது நிலைமையை இன்னும் மோசமாக்கும்" என்கிறார் அவர்.