இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடிதம்: “இந்தியா முன்னுதாரணமாக திகழப்போகிறது”
வரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து, இந்தியா கடந்த ஓராண்டுக் காலத்தில் வேகமான முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், எப்படி கொரோனாவை எதிர்கொண்டு உலகத்தை ஆச்சரியப்படுத்தியதோ அதுபோல பொருளாதாரத்தை மீட்டு உருவாக்கி உலகத்தை ஆச்சரியப்படுத்துவோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இரண்டாவது முறையாக மோதி பிரதமராகப் பதவி ஏற்று ஓராண்டு முடிந்துள்ளது.
இந்த நிலையில் மோதி மக்களுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
கொரோனா, பொருளாதாரம், புலம்பெயர் தொழிலாளர்கள், தற்சார்பு என பல்வேறு விஷயங்களை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கனவின் பாதை
இந்தியாவை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்காக 2019-ம் ஆண்டில் இந்திய மக்கள் வாக்களித்துள்ளனர். இந்தியாவை உலக அளவில் முன்னோடி நாடாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கடந்த ஓராண்டுக் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், இந்தக் கனவை நிறைவேற்றும் பாதையை நோக்கியவையாக உள்ளன என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை அடிக்கோடிட்டு குறிப்பிட்டுள்ள மோதி, ஜல் ஜீவன் மிஷன் மூலமாக, கிராமப்புறங்களில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும், வர்த்தகர்களின் பிரச்சனைகளுக்கு உரிய காலத்தில் தீர்வு காண்பதற்காக வியாபாரி கல்யாண் வாரியத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.