வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (20:11 IST)

எச்.ஐ.வி. நோயாளியின் சிறுநீரகத்தை மற்றொரு நோயாளிக்குப் பொருத்தி சாதனை

உலகில் முதன்முறையாக அமெரிக்க மருத்துவர்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடம் இருந்து சிறுநீரகத்தை தானமாக பெற்று இன்னொருவருக்குப் பொருத்தியுள்ளனர்.
2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகம் முழுவதும் 3.7 கோடி மக்கள் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். உலகளவில் பொது சுகாதாரத்தில் மிகவும் சவாலாக இருக்கும் நோய்களில் எச்.ஐ. வியும் ஒன்று என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
 
இந்நிலையில், அமெரிக்காவில் மேரிலாண்டில் பல்டிமோர் நகரத்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் எச்.ஐ.வி. யால் தொற்று உள்ள நோயாளியிடம் இருந்து சிறு நீரகத்தை எடுத்து, மற்றொருவருக்குப் பொறுத்தும் அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது இரு நோயாளிகளும் நன்றாக இருக்கிறார்கள்.
 
''எச்.ஐ.வியோடு வாழும் ஒருவர் சிறுநீரகம் தானம் செய்ய அனுமதிக்கப்பட்டது உலகிலேயே இது தான் முதல்முறை'' என்கிறார் மருத்துவர் டாரி செஜெவ்.
 
எச்.ஐ.வி. பாதிப்புள்ளவர்களுக்கு சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என முன்னதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புதிய வகை
 
ஆன்டி- ரெட்ரோவைரல் மருந்துகள் மூலமாக இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும். இவை சிறுநீரகத்துக்கு நல்லதாக பார்க்கப்படுகிறது.
 
ஜான்ஸ் ஹாப்கின்ஸில் மருந்தியல் மற்றும் புற்றுநோயியல் துறை இணை பேராசிரியர் கிறிஸ்டின் துரந்து ''இந்த அறுவை சிகிச்சை மக்களுக்கு எச்.ஐ.வி குறித்த பார்வைகளை மாற்றும். மேலும் மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படும்''என்றார் .
 
நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நன்றாக இருக்கிறார்கள். தற்போது நீண்ட கால அடிப்படையில் இதன் விளைவுகளைப் பார்க்கவேண்டும் என்கிறார் கிறிஸ்டின்.
 
கடந்த திங்கள் கிழமையன்று இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிறுநீரகத்தை தானமாக வழங்கிய அட்லான்டாவைச் சேர்ந்த 35 வயது நினா மார்ட்டினெஸ் ''நன்றாக இருக்கிறேன்'' என செய்தியாளர்களிடம் கூறினார்.
 
'கிரே அனாடமி' எனும் தொலைக்காட்சி தொடரின் ஒரு அத்தியாயத்தை பார்த்த பிறகு சிறுநீரகத்தை தானம் செய்ய முடிவெடுத்ததாகவும், மருத்துவ உலகில் முதல்முறையாக இந்த அறுவைச் சிகிச்சையின் ஒரு பகுதியாக இருந்தது உற்சாக உணர்வை தருவதாகவும் அவர் கூறினார்.
 
சிறுநீரகத்தை தானாமாக பெற்றவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் சிகிச்சை பெற்ற நபர் நலமாக இருக்கிறார் என துரந்து கூறினார்.
 
ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை மூலம் பிரிட்டன் நோயாளி ஒருவருக்கு எச்.ஐ.வி கிருமிகள் அகற்றப்பட்ட செய்தி வந்த ஒரு மாதத்துக்குள் எச்.ஐ.வி சிகிச்சையில் மருத்துவ உலகம் மற்றொரு குறிப்பிடத்தக்க மற்றொரு முன்னேற்றத்தை பார்த்திருக்கிறது.