1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (20:55 IST)

எஸ்ரா மில்லர்: மனநல சிகிச்சையை நாடுவதாக வெளிப்படையாக அறிவித்த சூப்பர் ஹீரோ - தயக்கம் உடைகிறதா?

stress
ஹாலிவுட்டில் டி.சி காமிக் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் எஸ்ரா மில்லர் தனக்கு ஏற்பட்டுள்ள "சிக்கலான மனநல பிரச்னைகளுக்காக" சிகிச்சையை நாடியுள்ளதாக அறிவித்துள்ளார் என்கிறன ஊடகச் செய்திகள்.
 
 
தன்னுடைய சமீபத்திய நடவடிக்கைகளால் "வருத்தம்" அடைந்தவர்களிடம் தான் மன்னிப்பு கோருவதாக, பால்புதுமையரான எஸ்ரா மில்லர் தெரிவித்துள்ளார்.

 
29 வயதான எஸ்ரா மில்லர் மீது, சமீபத்தில் அமெரிக்காவின் வெர்மாண்ட் மாகாணத்தில் வீடு புகுந்து திருடியதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், ஹவாயில் இருமுறை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இவர் ஜஸ்டிஸ் லீக், பேட்மேன் Vs சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ், சூசைட் ஸ்குவாட், ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
 
தற்போது தற்காலிகமாக துன்புறுத்தல் தடுப்பு உத்தரவின் கீழ் உள்ள 12 வயது சிறுமி ஒருவரிடம் தேவையற்ற முறையில் நடந்துகொண்டதாகவும், 18 வயது பெண்ணை மூளைச்சலவை செய்ததாகவும் எஸ்ரா மில்லர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
 
 
மனநல பிரச்னைகளுக்கு சிகிச்சையை தொடங்கியதாக அறிவித்து எஸ்ரா மில்லர் வெளியிட்ட அறிக்கையில், "தீவிரமான நெருக்கடி காலத்தை சமீபமாக எதிர்கொண்டு வரும் நிலையில், நான் சிக்கலான மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை தற்போது புரிந்துகொண்டுள்ளேன். அவற்றுக்கு தற்போது சிகிச்சையை தொடங்கியுள்ளேன்.
 
"என்னுடைய கடந்த கால நடவடிக்கைகளால் வருத்தம் அடைந்தவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.
 
 
ஆரோக்கியமான, பாதுகாப்பான, ஆக்கபூர்வமான வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள நான் உறுதி பூண்டுள்ளேன்." என அவர் தெரிவித்துள்ளார்.

 
ஹாலிவுட்டில் புகழ்வாய்ந்த சூப்பர் ஹீரோவாக உள்ள எஸ்ரா மில்லர், மனநல பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுப்பதை பொது வெளியில் அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவிலும் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, கடந்த 2015ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், தான் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார். சிறந்த நடிப்பு, சர்வதேச விருதுகள் மற்றும் பாராட்டுகள் ஆகியவற்றுக்காக அறியப்படும் தீபிகா, ஒருநாள் காலை தான் தூங்கி எழுந்தபோது, தனது வாழ்க்கை அர்த்தமற்று இருப்பதை போன்று உணர்ந்ததாகவும், அதை நினைத்து அடிக்கடி கதறி அழுததாகவும் கூறுகிறார். மேலும், தனக்கு தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார். தொடர்ந்து தான் எதிர்கொண்ட மனநல பிரச்னைகள் குறித்து பொதுவெளியில் பேசுபவராக தீபிகா படுகோனே உள்ளார்.
 
அதேபோன்று, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் தான் பதற்றம் தொடர்பாக சிகிச்சை எடுப்பதாக கூறியிருந்தார்.
 
 
பிரபலங்கள் பலரும் இதனை பொதுவெளியில் பேசத்துணிந்துள்ள நிலையில், இது குறைவான விகிதம்தான் என்றும், நடுத்தர குடும்பங்களில் மனநல பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுப்பது இன்னும் தயக்கத்திற்கு உரிய ஒன்றாகவே கருதப்படுகிறது என்றும் கூறுகிறார், சென்னையை சேர்ந்த மனநல ஆலோசகர் சுஜாதா.


பிபிசி தமிழின் நந்தினி வெள்ளைச்சாமியிடம் பேசிய அவர், "மனநல பிரச்னையை பொதுவெளியில் பேசுவதில் இன்னும் தயக்கங்கள் நிலவுகின்றன. உடல்நல பிரச்சனையைப் போன்று மனநல பிரச்னைகளை பெரும்பாலானோர் புரிந்துகொள்வதில்லை. அதன் முக்கியத்துவத்தை பலரும் ஏற்பதில்லை, அதற்கான விழிப்புணர்வு இல்லை.
 
 
அதிலும் நடுத்தர குடும்பங்களில் இளம் வயதினருக்கு ஏற்படும் மனநல பிரச்னைகளை குடும்பத்தினர் புரிந்துகொள்வதில்லை. "கேட்பதெல்லாம் வாங்கி கொடுக்கிறோம், அவர்களுக்கு என்ன குறை" என்று பிள்ளைகளின் மனநல பிரச்னைகளை புரிந்துகொள்ளாத பெற்றோர் இருக்கின்றனர். மனநல ஆலோசகரிடம் செல்வதையே பிரச்னையாக கருதுபவர்கள் உள்ளனர். உடல்நல பிரச்னைகளுக்கு பரிதாபப்படுகின்றனர், ஆனால், இளம் வயதினர் யாருக்காவது மன அழுத்தம் இருந்தால் அவர்களை மற்றவர்கள் விமர்சிப்பதுதான் தொடர்கிறது. பரிதாபப்படுவது, விமர்சிப்பது இரண்டுக்குமான வித்தியாசம் இருக்கிறது. விமர்சிப்பதால் ஏற்படும் பயம்தான் மனநல பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுக்க விடாமல் தடுக்கிறது" என்கிறார் அவர்.
 

மனநல சிகிச்சைக்கு சென்றாலும் அதனை தொடர்வதிலும் சிக்கல்கள் நீடிப்பதாக கூறுகிறார் சுஜாதா.
 
 
"சிகிச்சையை தொடர்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. பெருநகரங்களில் ஒரு அமர்வுக்கு 750 ரூபாய்க்கு குறைவாக எந்த மனநல ஆலோசகரும் கட்டணம் வசூலிப்பதில்லை. பிரபலமான ஆலோசகர் என்றால் 1,500-2,000 ரூபாய் வரை வாங்குகின்றனர். இதற்கு நான் செலவு செய்ய வேண்டுமா என்ற எண்ணம் ஏற்படுகின்றது. இதனால், ஒரே அமர்வில் சரியாகிவிட வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் அப்படி நடப்பதில்லை. தொடர் சிகிச்சைகளில்தான் தீர்வு ஏற்படும் என்றாலும், பாதிக்கப்பட்டோர் சிகிச்சையைத் தொடர்வது பல நேரங்களில் நடப்பதில்லை.

 
மாத்திரைகள் மூலம் சரிசெய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர்" என தெரிவிக்கிறார் சுஜாதா.

 
குடும்பங்களில் பகிர்ந்துகொள்ள முடியாத நிலையில், தினந்தோறும் அதன் தீவிரம் அதிகமாகும்போது நிச்சயம் மனநல ஆலோசகரை அணுக வேண்டும் என அறிவுறுத்துகிறார் சுஜாதா.