வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 ஏப்ரல் 2014 (16:36 IST)

கென்யாவில் குண்டு வெடிப்பு: 6 பேர் பலி எராளமானோர் காயம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபி அருகேயுள்ள சோமாலியர்கள் அதிகம் வாழும் சொமாலி மாவட்டத்தில் நேற்று அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடித்தது. இதில் ஆறுபேர் பலியாகினர். 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 
காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவுவிடுதிகளிலும் ஒரு மருத்துவமணையிலும் இவ்வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு நாட்டு வெடிகுண்டு வகையை சேர்ந்ததாகவோ அல்லது கையெறி குண்டாகவோ இருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  
இது தீவிரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல் என்று அம்மாவட்ட காவல்துறை அதிகாரி பென்சன் கிபியூ தெரிவித்தார். இப்பிரச்சனைக்கு சிறப்புக்கவனம் அளித்து தீவிரவாதிகளை விரைவில் கைது செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெஸ்ட்கேட் பல்பொருள் அங்காடியில் நடந்த தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
 
இவ்வகையான தாக்குதல்களை நடத்துவது சோமாலியாவின் அல்சபாப் ஆயுதகுழு என கூறப்படுகிறது. கென்ய அரசாங்கம் தனது துருப்புகளை சோமாலியாவுக்கு அனுப்பி அங்குள்ள அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படும் நிலையிலேயே அல்சபாப் ஆயுதக்குழு கென்யாவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. 2011-ம் ஆண்டு முதல் தெற்கு சோமாலியா பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கு உதவியாக கென்யா தனது படைகளை அங்கு அனுப்பியதே அந்நாட்டில் குண்டுவெடிப்புக்கக் காரணமாகக் கருதப்படுகிறது.