1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj

டொனால்டு டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது ஏன்? அடுத்து என்ன நடக்கும்?

அமெரிக்க தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாட்களில் நடைபெறவுள்ளது, ஆனால் அதிபர் டொனால்ட் டிரம்ப் மகிழ்ச்சியாக இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது போல் தெரிகிறது.
 

அவர் மதிப்புமிக்க அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

நார்வேயின் வலதுசாரி தலைவரான கிறிஸ்டியன் டைப்ரிங் யெடே, டிரம்பின் பெயரை 2021 ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

அண்மையில் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையில் அதிபர் டிரம்ப் வகித்த பங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார்.

ஆக்கிரமிப்பு மேற்குக்கரை இணைப்பு திட்டத்தை இடைநிறுத்தியது இஸ்ரேல்: மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?


"அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட மற்றவர்களை விட டிரம்ப் அதிகம் செய்துள்ளார் என்று நான் நினைக்கிறேன்" என்று கிறிஸ்ட்டியன் டைப்ரிங் யெட்டே, ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இருப்பினும், அவர் ஒருபோதும் பெரிய டிரம்ப் ஆதரவாளராக இருந்ததில்லை என்று கூறுகிறார். "அவரின் சில நடவடிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதை விட உண்மைகளின் அடிப்படையில் குழு முடிவு செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.

எந்த ஒரு நாட்டுத் தலைவரோ, தேசிய அளவிலான அரசியல்வாதியோ நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படலாம்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், வெளியுறவுக் கொள்கை நிறுவனங்களின் இயக்குநர்கள், ஏற்கனவே நோபல் பரிசை வென்றவர்கள் மற்றும் நார்வே நோபல் கமிட்டியின் உறுப்பினர்கள் ஆகியோரும் இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்படலாம்.

பரிந்துரை செய்வதற்கு எந்த ஒரு அழைப்பும் தேவையில்லை. ஆண்டின் பிப்ரவரி ஒன்றாம் தேதிக்குள் வரும் எந்த ஒரு பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படும்.

2020ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு 318 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், இருப்பினும் வெற்றியாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. நார்வேயின் நோபல் குழு நியமிக்கப்பட்ட நபர்கள் குறித்து பகிரங்கமாக எந்த கருத்தும் தெரிவிப்பதில்லை, 50 ஆண்டுகளாக இதுபோன்றவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன.

இதற்கு முன்னர் டிரம்பின் பெயர்பரிந்துரைக்கப்பட்டுள்ளதா?
ஆம், முன்னதாக 2018 ஆம் ஆண்டில், நார்வே நாட்டைச் சேர்ந்த ஒரு வலதுசாரி அரசியல்வாதி இந்த விருதுக்கு டிரம்பை பரிந்துரைத்தார். அந்த நேரத்தில், தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் அந்த பரிந்துரைக்கான காரணம் எனக் குறிப்பிடப்பட்டன.

ஆனால் இந்த விருதை டிரம்ப் பெறவில்லை. ஆனால் இந்த முறை கன்சர்வேடிவ் முன்னேற்றக் கட்சியின் கிறிஸ்டியன் டைப்ரிங் அவர் விருதின் ஒவ்வொரு நிபந்தனைக்கும் பொருந்துவதாக நம்புகிறார்.

இதற்கு முன்னர் டிரம்பின் பெயர்பரிந்துரைக்கப்பட்டுள்ளதா?

ஆகஸ்ட் மாதம், இஸ்ரேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பரஸ்பர உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இஸ்ரேல் மேற்குக் கரையில் அதன் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கான சர்ச்சைக்குரிய திட்டங்களை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதை ஒரு 'ஆச்சரியகரமான' அறிக்கையில் அறிவித்த அவர், இரு நாடுகளின் ஒப்பந்தத்தையும் ஒரு 'வரலாறு' என்று விவரித்தார், 'இது அமைதியின் திசையில் மிகப்பெரிய வெற்றி' என்றார்.

இதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனரா?
டிரம்பிற்கு முன் ஜனாதிபதி வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட், ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் மற்றும் ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்றால், 1906 இல் தியோடர் ரூஸ்வெல்ட், 1920 இல் உட்ரோ வில்சன், 2002 இல் ஜிம்மி கார்ட்டர் மற்றும் 2009 இல் பராக் ஒபாமா ஆகியோருக்குப் பிறகு நோபல் வென்ற ஐந்தாவது அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இருப்பார்.

ஒபாமா ஜனாதிபதியான சில மாதங்களிலேயே பரிந்துரை செய்யப்பட்டார். இது அமெரிக்காவில் விமர்சிக்கப்பட்டது, சிலர் , அவர் விருது பெறுவதற்கு தகுதியான எந்த வேலையையும் அதுவரை அவர் செய்யவில்லை என்று கூறினர்.

அந்த நேரத்தில், 2013 இல் டிரம்ப் ட்வீட் செய்து ஒபாமாவின் விருதை ரத்து செய்யக் கோரியிருந்தார்.

முன்னாள் நோபல் செயலர் கிர் லுண்டெஸ்டாட் ஒபாமாவை இந்த விருதிற்கு தெரிவு செய்ததற்கு, பின்னர் வருத்தம் தெரிவித்தார். "ஒபாமாவின் பல ஆதரவாளர்கள் கூட இந்த விருது தவறு என்று நம்பினர். பரிசு குழு எதிர்பார்த்த அளவு யாரும் இருக்கவில்லை" என்று அவர் செய்தி நிறுவனமான ஏ.பி.யிடம் தெரிவித்தார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, விருதுடன் தனக்கு கிடைத்த 1.4 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கினார்.

இதற்கு முன்னர் நோபலில் சர்ச்சைக்குரிய பரிந்துரைகள் இருந்ததா?
நோபல் வென்றவர்களில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா மற்றும் அன்னை தெரசா போன்ற பிரபலங்களும் அடங்குவர். ஆனால் நோபல் வரலாற்றில் இதுபோன்ற பல பரிந்துரைகள் சர்ச்சைகளால் சூழப்பட்டுள்ளன.

அடோல்ஃப் ஹிட்லர், இந்த அமைதி பரிசுக்கு 1939 இல் ஸ்வீடிஷ் நாடாளுமன்ற உறுப்பினரால் பரிந்துரைக்கப்பட்டார். அது நையாண்டியாக செய்யப்பட்டதாகவும், பரிந்துரை உடனடியாக வாபஸ் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் 1945 ஆண்டிலும் , பின்னர் மீண்டும் 1948 இல் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், வெற்றியாளரை, ஐந்து பேர் கொண்ட நோபல் குழு தேர்வு செய்கிறது, இந்த குழு நார்வே நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படுகிறது். அடுத்த ஆண்டு ,அதாவது 2021 அக்டோபர் வரை , இந்த விருதை வென்றவர் அறிவிக்கப்படுவதில்லை.