1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (22:21 IST)

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணம் எப்போது வரும்?

sri lanka
இலங்கையுடன் அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று (செப்டம்பர் 1) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 
இதன்படி, 48 மாத காலத்திற்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியுடன் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றது.
 
 
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மற்றும் பொருளாதார திருத்தம் தொடர்பிலான வேலை திட்டத்திற்கான கலந்துரையாடல்களுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி இலங்கைக்கு வருகைத் தந்தது.
 
 
இந்த குழுவின் விஜயத்தில், இலங்கை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைமைகளுடன் பல்வேறுப்பட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
 
 
இவ்வாறான பேச்சுவார்த்தைகளின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளான மெசர்ஸ் ப்ரூயர் மற்றும் நோசாகி ஆகியோர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.
 
 
பொருளாதாரத்தை சீர் செய்தல் மற்றும் கொள்கைகளை திருத்துவதற்கு ஆதரவளித்தல் ஆகியவற்றுக்காக இலங்கை அதிகாரிகளுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
 
 
இதன் அடிப்படையில், 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை கடன் வசதியாக பெற்றுக்கொடுக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

 
இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டாலும், இலங்கைக்கு நிதி உதவி தற்போதைக்கு கிடைக்காது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
 
 
 
எம்.கணேஷமூர்த்தி, சிரேஷ்ட விரிவுரையாளர் பொருளியல் துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

 
இது ஆரம்பகட்ட நடவடிக்கை என்ற போதிலும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி உதவி கிடைப்பதற்கு இன்னும் 3 முதல் 6 மாத காலம் எடுக்கும் என அவர் கூறுகின்றார்.
 
 
''அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு என்பது, ஆரம்ப கட்டம் தான். அடுத்த கட்டத்திற்கு போகும் போது தான், அடுத்த பிரச்னைகள் தொடர்பில் பேச வேண்டிவரும். அதிகாரிகள் மட்டத்தில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கின்றது. இதில் கடன் மறுசீரமைப்பு தான் மிக முக்கிய பிரச்னையாக இருந்தது. இலங்கையை பொருத்த வரை, சீனாவை தவிர, ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாக சொல்லப்படுகின்றது," என்று அவர் கூறினார்.
 
 
"சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முடிவுக்கு வந்தால், அது சரி வரும் என நினைக்கின்றேன். சர்வதேச நாடுகளிடமிருந்து ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களை நாம் எவ்வாறு மீள செலுத்த போகின்றோம் என்பது குறித்து அந்தந்த நாடுகளுடன் இணக்கப்பாட்டிற்கு வருவதே, கடன் மறுசீரமைப்பு என கூறப்படுகின்றது. அந்தந்த நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொண்டால் மாத்திரமே அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். அதுவொரு கடன் நிபந்தனையாக பார்க்கப்படுகின்றது," என்கிறார் அவர்.

 
"வழமையாக அப்படி வருவது குறைவு. கடனை மீள செலுத்த முடியாது என இலங்கை ஏற்கனவே அறிவித்துவிட்டது. அவ்வாறு அறிவித்தபடியால், இது முக்கியமாக காணப்படுகின்றது. கடனை மீள செலுத்த முடியாது என அறிவித்த பிறகு, அரசாங்கம் நிதி ஆலோசகரையும், சட்ட ஆலோசகரையும் நியமிக்க வேண்டும். இந்த இரண்டும் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கின்றது. அவர்களின் ஆலோசனைக்கு அமையவே இலங்கை நடக்கும். இலங்கைக்காக அவர்கள் தான் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவார்கள்," என பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி தெரிவித்தார்.
 
 
நிதி ஆலோசனை மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்கள் மிக முக்கியமான மூன்று விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தும் என அவர் கூறுகின்றார்.
 
மூன்று முக்கிய கேள்விகள்
 
 
03. இலங்கை ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களில் மீள செலுத்திய தொகைக்கு அப்பால் காணப்படுகின்ற எஞ்சிய தொகையில் குறைப்புக்களை மேற்கொள்ள முடியுமா?
 
 
என்ற மூன்று விடயங்கள் குறித்து, இந்த நிறுவனங்கள் கடன் வழங்கிய நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முயற்சிக்கும் என அவர் கூறுகின்றார்.
 
 
அதிகாரிகள் மட்டம் என்றால், சர்வதேச நாணய நிதியம் இலங்கை சார்பில் யாருடன் கலந்துரையாடல்களை நடத்தும் என பிபிசி தமிழ், பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தியிடம் கேள்வி எழுப்பியது.
 
 
''இலங்கையில் அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடல்கள் நடத்தப்படும். நிதி அமைச்சின் அதிகாரிகள், மத்திய வங்கியின் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்துவார்கள். அதுவே தொழில்நுட்ப ரீதியிலான கலந்துரையாடல். அதன் பின்னரே, நாட்டினுடைய தீர்மானங்களை எட்டக்கூடிய ஜனாதிபதி, நிதி அமைச்சர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். முக்கியமாக இலங்கை அதிகாரிகளுடனேயே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். அரசியல்வாதிகளுடன் பெரியளவிலான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்படாது." என அவர் கூறினார்.
 
 
அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, எத்தனை மாதங்களில் இலங்கைக்கு நிதி உதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்கும்?

 
''சுமார் 6 மாதம் எடுக்கும். 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் தருவதாக ஒத்துக் கொண்டால் கூட, அதை பகுதி பகுதியாக பிரித்தே தருவார்கள். உண்மையை சொன்னால், சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படுகின்ற கடன் தொகையானது, இலங்கைக்கு எந்த வகையிலும் போதாது.

 
கிட்டதட்ட 60 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உள்ள ஒரு நாட்டிற்கு, 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் எப்படி போதும்;?. அப்படி என்றால், ஏன் சர்வதேச நாணய நிதியத்திற்கு பின்னால் செல்ல வேண்டும். அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், ஆரம்பகட்ட நடவடிக்கைகளை செய்துக்கொள்வதற்காக சிறியளவிலான ஒரு தொகையை கொடுக்கும். கட்டமைப்பை மாற்றுவதற்காக சிறிய தொகையை கொடுக்கும்.
 
 
சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்திருக்கின்றது. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றது, ஒப்பந்தம் வெற்றிகரமாக கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது என்று சொன்னால், அது கடன் வழங்குபவர்களுக்கு அல்லது கடன் தரமிடும் நிறுவனங்களுக்கு ஆகியோருக்கு நல்ல சமிக்ஞையை கொடுக்கும். கடன் மீள செலுத்த முடியாது என்ற விடயத்தை அந்த நிறுவனங்கள் திருத்தி அமைக்கும். கடனை மீள செலுத்த முடியாது என்ற பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்படும்.
 
 
அதன் பின்னர் மூலதன சந்தையில் இலங்கைக்கு கடன்களை வாங்கக்கூடிய நிலைமை ஏற்படும். இது தான் இலங்கைக்கு கிடைக்கக்கூடிய மிக முக்கியமான நன்மையே தவிர, 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் எப்படியும் போதாது. இந்தியா அதைவிட பெரியளவு தொகையை கடனாக இலங்கைக்கு கொடுத்திருக்கின்றது" என பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.
 
 
 
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் 2.9 பில்லியன் அமெரிக்க டாலரானது, யானை பசிக்கு சோள பொறி போன்றது என பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.
 
 
எனினும், இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு, இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் நிதி உதவியை வழங்கும் பட்சத்தில், அது இலங்கைக்கு வேறு வழிகளில் உதவிகளை ஏற்படுத்தும் என அவர் கூறுகின்றார்.

 
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடந்த காலங்களில் இலங்கை வாங்கிய கடனை, இன்றும் செலுத்தி வருவதாக பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.
 
 
கடனை திருப்பி செலுத்தாத போதிலும், ஒரு நாடு கஷ்டத்தில் இருக்குமானால், சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்க முன்வரும் என அவர் கூறுகின்றார்.

 
இலங்கைக்கு கடந்த காலங்களில் நெருக்கடிகள் வரும் சந்தர்ப்பங்களில், 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளதாகவும், நெருக்கடியிலிருந்து சற்று மீள எழும் சந்தர்ப்பங்களில் அந்த நிகழ்த்தி திட்டத்தை இடைநடுவிலேயே இலங்கை நிறுத்தி விடும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

 
சர்வதேச நாணய நிதியம், இந்த 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை, மூன்று அல்லது நான்கு தவணைகளாகவே வழங்கும் என அவர் கூறுகின்றார்.
 
 
அவ்வாறு இரண்டு அல்லது மூன்றாவது தவணைகளில் நாடு வழமைக்கு திரும்புமானால், அந்த நிகழ்த்தி திட்டம் அதோட நிறுத்தப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
 
 
எவ்வாறாயினும், அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்ட போதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு அனுமதி பெறப்பட்டு, நிதி வசதி இலங்கைக்கு கிடைப்பதற்கு சுமார் 3 முதல் 6 மாத காலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.