ஒரே அடியில் காலி செஞ்சுருவேன்: அமெரிக்காவுக்கு வடகொரியாவின் எச்சரிக்கை
உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனை செய்து வரும் வடகொரியாவின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா தனது கார்ல் வின்சன் போர்க் கப்பலை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி வைத்தது. இதனால் எந்த நேரத்திலும் அமெரிக்கா-வடகொரியா போர் மூளலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் நவீன ரக போர்க் கப்பலை ஒரே அடியில் மூழ்கடிக்க தயார் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து வடகொரியாவின் ரோடாங் சின்மன் என்ற செய்தித்தாளில், நமது புரட்சிகர படைகள் அணுசக்தியால் இயங்கக்கூடியது. இதன் உதவியால் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடித்து விடலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் தனது படையின் பலத்தை உலகம் அறியும் என்றும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வடகொரியாவின் ஹைட்ரஜன் மற்றும் அணுகுண்டுகள் அதிகளவில் கைவசம் இருப்பதால் இதை வெறும் மிரட்டலாக மட்டும் எடுத்து கொள்ளக்கூடாது என்று அமெரிக்காவுக்கு ஒருசில நாடுகள் ஆலோசனை வழங்கி வருகின்றன.