வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 24 ஜூன் 2015 (20:24 IST)

விடுதலைப் புலிகளால் இலங்கைக்கு ஆபத்து - கோத்தபய ராஜபக்சே

இலங்கையின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளால் இன்னமும் அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே எச்சரித்துள்ளார்.
 

 
விடுதலைப் புலிகளின் அனைத்துலக ஆதரவாளர்களும், அதன் வலையமைப்பும் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாக, அமெரிக்க தீவிரவாத முறியடிப்பு துறை பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையை ஆதாரம் காட்டி அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
 
இது குறித்து கூறியுள்ள கோத்தபய ராஜபக்சே, ‘முந்தைய அரசாங்கத்தின் விழிப்பு நிலையால், விடுதலைப் புலிகள் தலையெடுக்கும் அச்சுறுத்தல் தடுக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தாக்குதல் எதுவும் இடம்பெறவில்லை என்பதால், விடுதலைப் புலிகள் முற்றாக இல்லாமல் போய் விட்டனர் என்று அர்த்தமில்லை.
 
இன்னமும் சில விடுதலைப் புலிகள் தனிநாட்டை அமைப்பதற்கான போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அர்ப்பணிப்புடன் உள்ளனர். கடந்த ஆண்டு இத்தகைய ஒரு முயற்சி முறியடிக்கப்பட்டு, மூன்று விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
 
ஆனால் இப்போது வடக்கு கிழக்கில் முக்கியமான இடங்களில் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டிருந்த பெருந்தொகை நிலங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் மீண்டெழுவதை தடுக்க இந்த இராணுவ முகாம்கள் அவசியம்.
 
சில சந்தர்ப்பங்களில், முக்கியமான இடங்களில் இருந்த இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டுள்ளன. இது எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு முக்கிய நலன்களைக் கொடுத்து குழப்பமான நிலைமைகளை ஏற்படுத்தக் கூடும்” என்று கூறியுள்ளார்.